

முற்போக்கு சிந்தனையாளர் நரேந்திர தபோல்கர் மற்றும் கோவிந்த் பன்சாரே படு கொலை வழக்குகளில் விசாரணை மந்த நிலையில் நடப்பது குறித்து பம்பாய் உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
கடந்த 2013 ஆகஸ்ட் 20-ம் தேதி புனேவில் தபோல்கர் கொல்லப் பட்டார். இவரைத் தொடர்ந்து 2015 பிப்ரவரி 16-ம் தேதி சுடப்பட்ட பன்சாரே, அடுத்த 4 நாட்களில் இறந்தார். இவ்விரு வழக்குகளை யும், சிபிஐ மற்றும் சிறப்பு புலனாய் வுக் குழு விசாரித்து வருகிறது.
கர்நாடகாவில் 2015 ஆகஸ்ட் 30-ம் தேதி இதேபோன்று போராசிரியர் கர்புர்கி படுகொலை செய்யப்பட்டதற்கும் இவ்விரு கொலைகளுக்கும் உள்ள தொடர்பு களை விசாரணை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இதுதொடர்பான ஆய்வக முடிவுகள் மாறுபட்ட வகையில் உள்ள நிலையில், 3-வது அறிக் கையை அகமதாபாத் தடயவியல் பரிசோதனைக் கூடத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது.
மூடி முத்திரையிட்ட இந்த அறிக்கையை மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.சி.தர்மாதிகாரி மற்றும் பி.பி.கொலபவல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக சிபிஐ மற்றும் சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.
அப்போது, ‘தபோல்கர் மற்றும் பன்சாரே படுகொலை வழக்கு விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. விசாரணை மந்த கதியில் செல்கிறது’ என, நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
அதற்கு பதில் அளித்த சிபிஐ, ‘தபோல்கர், பன்சாரே மற்றும் கல்புர்கி ஆகியோரைக் கொலை செய்ய ஒரே ஆயுதம் பயன்படுத்தப்பட்டதா என்பதை உறுதி செய்ய, தடயவியல் மாதிரியை ஸ்காட்லாந்து யார்டுக்கு அனுப்பியுள்ளோம்’ என விளக்கம் அளித்தது.
சிறப்பு புலனாய்வுக் குழு சார்பில் ஆஜரான அசோக் முந்தார்கி கூறும்போது, ‘பன்சாரே கொலை வழக்கில் 2 பேரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது’ எனக் கூறினார். அதன்பின் மார்ச் 20-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.