

ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவ நிலைகள் மீது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் வியாழன் இரவு மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஜம்மு மாவட்டத்தின் ஆர்னியாவிலும், சம்பா மாவட்டத்தில் உள்ள ராம்கர் பகுதியிலும் உள்ள சர்வதேச எல்லை அருகே அமைக்கப்பட்டுள்ள இந்திய ராணுவ நிலைகள் மீது இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இது குறித்து இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, "ஜம்மு மாவட்டத்தின் ஆர்னியாவிலும், சம்பா மாவட்டம் ராம்கர் பகுதியிலும் உள்ள சர்வதேச எல்லை அருகே அமைக்கப்பட்டுள்ள இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
தீபாவளி அன்று சம்பா, கத்துவா பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலால் எல்லை கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர்.
பாகிஸ்தானுக்கு பதிலடியாக இந்திய ராணுவ வீரர்கள் கடும் தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் நமது தரப்பில் பொருள் மற்றும் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை" என்றார்.
கடந்த 1-ம் தேதி முதல் பலமுறை போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர். இதுவரை 95-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள னர். 113 கிராமங்களில் வசித்து வந்த 30 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்து சென்றுவிட்டனர்.