Published : 26 Sep 2013 09:31 PM
Last Updated : 26 Sep 2013 09:31 PM

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு: 7 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக விளக்கமளிகக அறிவுறுத்தி மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதில், நிலக்கரிச் சுரங்கங்களை அடையாளம் காண்பது மட்டுமே மத்திய அரசின் பணி, அதை ஒதுக்கீடு செய்தது அனைத்தும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள்தான். எனவே, முறைகேட்டுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டது.

இதைத் தொடர்ந்து, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டை மேற்கொண்ட மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரம், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் ஆகிய மாநில அரசுகள் தங்களின் பதில் மனுவை வரும் அக்டோபர் 29-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான அமர்வு வியாழக்கிழமை உத்தரவி்ட்டது. இது தொடர்பாக அந்த மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த விவகாரத்தில் மத்திய அரசு முரண்பாடான தகவல்களை தெரிவித்து வருவதாக உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.

உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது: “சம்பந்தப்பட்ட மாநிலங்கள் சுரங்க ஒதுக்கீட்டை எவ்வாறு மேற்கொள்கின்றன என்பது குறித்து தெரிவிக்க வேண்டும். ஒதுக்கீட்டுப் பணிகளை மேற்கொள்வதில் மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் உள்ள பங்கு என்ன என்பது பற்றியும் கூற வேண்டும்.

சுரங்க ஒதுக்கீடு செய்யும்போது மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்கள் குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். இந்த விளக்கத்தை அரசின் செயலாளர் அந்தஸ்திலான அதிகாரி அளிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x