

பாட்னாவில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவங் களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மாநில மக்கள் அமைதி காத்திட வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். நாகரிக சமுதாயத்தில் வன் முறைக்கு இடம் இல்லை.மாநில மக்கள் நிதானம் கடைபிடித்து அமைதி காத்திட வேண்டும். பயங்கரவா தத்தை ஒழித்திட நாடு ஒற்றுமையுடன் நின்று மன உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும், குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று பிரணாப் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு உதவி:
பிரதமர் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து நிதானம் இழக்காமல் மாநில மக்கள் அமைதி காத்திட வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார். குண்டு வெடிப்பு பற்றிய தகவல் கிடைத்த உடனேயே முதல்வர் நிதீஷ் குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர், குற்றவாளிகளை உடனடியாக கண்டறிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார். புலன் விசாரணையில் மத்திய அரசு எல்லா உதவிகளையும் வழங்கும் என்று முதல்வரிடம் உறுதி அளித்தார் என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோனியா அதிர்ச்சி:
குண்டுவெடிப்பு சம்பவம் அதிர்ச்சி, வேதனை தருகிறது. ஜன நாயகத்தை வேருடன் அழிக்கும் நோக்கத்தில் கோழைத்தனமான இந்த தாக்குதல்கள் நடத்தப்படு கின்றன. இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை குற்றவாளி கூண்டில் ஏற்றி தக்க தண்டனை வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளதாக காங்கிரஸ் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
முதல்வரின் பயணம் ரத்து
முங்கர் பகுதிக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை குண்டு வெடிப்புச் சம்பவம் காரணமாக ரத்து செய்தார் முதல்வர் நிதீஷ் குமார். சட்டம், ஒழுங்கு நிலவரம் தொடர்பாக தலைமைச் செயலர் ஏ.கே.சின்ஹா, மாநில காவல்துறை தலைவர் அபி ஆனந்த், ,உள்துறை முதன்மைச் செயலர் அமீர் சுமானி ஆகியோரை அழைத்து முதல்வர் அவசர ஆலோசனை நடத்தினார்.
உடனடியாக விசாரணையை தொடங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்ட முதல்வர் விசாரணைக்குத் தேசிய புலனாய்வு அமைப்பின் உதவி பெறப்படும் என்றார். முங்கர் பகுதிக்கான தனது பயணத்தை நிதீஷ் குமார் ரத்து செய்தார்.
விசாரணை தேவை:
காங்கிரஸ் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் அதே நாளில் குண்டுவெடிப்பும் நிகழ்ந்துள்ளது என்றால் அது வியப்பை ஏற்படுத்துகிறது. இது பற்றி விரிவான விசாரணை நடத்த வேண்டும். இல்லையெனில் பீகாரில் ஆட்சியைப் பிடிப்பது என்கிற மோடியின் திட்டத்துக்கு தளம் போடுவதாகவே அமைந்துவிடும் என்றார் பீகார் மாநிலத்துக்கான காங்கிரஸ் கட்சி பொதுச் செயலர் திக்விஜய் சிங்.
மாநில அரசும் மத்திய அமைப்புகளும் இணைந்து விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என்றார் மற்றொரு பொதுச்செயலரான ஷகீல் அகமது.
என்.ஐ.ஏ. விரைவு குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடங்களில் நேரடி விசாரணை நடத்துவதற்காக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), தேசிய பாதுகாப்புப் படை ஆகியவை பாட்னா விரைந்துள்ளதாக உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்தார். மும்பையில் நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது: குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக பீகார் முதல்வரிடம் தொடர்பு கொண்டு பேசினேன். என்.ஏ.ஐ. அதிகாரிகளும் தேசிய பாதுகாப்புப் படை குழுவினரும் பாட்னா விரைந்துள்ளனர்.
ஜூலையில் புத்த கயாவில் உள்ள கோயிலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ள என்.ஐ.ஏ. படைகளும் பாட்னா சென்றுள்ளது என்றார் ஷிண்டே.
உளவு தோல்வி: சுஷ்மா உளவு தகவலை திரட்டுவதில் தோல்வி கண்டுள்ளதையே பாட்னா குண்டு வெடிப்பு சம்பவம் காட்டுகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார் பா.ஜ.க. தலைவர் சுஷ்மா ஸ்வராஜ். குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் டுவிட்டரில் அவர் பதிவு செய்துள்ளார்.