தலாக் முறையை செல்லாது என்று அறிவிப்பது புனித நூலான குரானை திருத்துவதற்கு சமம்: உச்ச நீதிமன்றத்தில் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வாதம்

தலாக் முறையை செல்லாது என்று அறிவிப்பது புனித நூலான குரானை திருத்துவதற்கு சமம்: உச்ச நீதிமன்றத்தில் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வாதம்
Updated on
2 min read

தலாக் முறை செல்லாது என்று அறிவித்தால், அது அல்லாவின் உத்தரவை அவமதிப்பதற்கு சமம். மேலும், புனித நூலான குரானை திருத்துவதற்கு சமம் என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது.

முஸ்லிம் மத வழக்கப்படி, மூன்று முறை தலாக் என்ற வார்த்தையை உச்சரிப்பதன் மூலம், சட்டப்பூர்வ மனைவியை விவாகரத்து செய்துவிடலாம் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்து வருகின்றன. இந்த வழக்கின் ஒரு பகுதியாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்(ஏஐஎம்பிஎல்பி) தனது எழுத்துப்பூர்வமான வாதத்தை வழக்கறிஞர் இஜாஸ் மக்பூல் மூலம் தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில் ஏஐஎம்பிஎல்பி கூறியிருப்பதாவது:

முஸ்லிம்கள் தங்கள் மத வழக்கப்படி தனிநபர் சட்ட நடைமுறையை பின்பற்றி வருகின்றனர். இந்த நடைமுறைக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 25-ல் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இச்சட்ட பிரிவின்படி, இந்திய குடிமகன் ஒருவர் தான் விரும்பும் மதத்தைப் பின்பற்றிக் கொள்ள உரிமை வழங்கப்பட்டுள்ளது.

அல்லாவின் உத்தரவின்படியும், அவரது தூதர்களின் வழிகாட்டு தலின்படியும், புனித நூலான குரானில் குறிப்பிட்டுள்ள மூன்று தலாக் முறையை முஸ்லிம்கள் பின்பற்றி வருகின்றனர். புனித நூலில் குறிப்பிட்டுள்ள ஒரு வாசகத்தை சாதாரணமாக விமர்சிக்க அனுமதிப்பது அதை அவமதிக்கும் செயலாகும். இச்செயலை அனுமதித்தால் இஸ்லாம் என்ற மார்க்கமே இல்லாமல் போய்விடும்.

மூன்று முறை தலாக் உச்சரித்து விவாகரத்து செய்யும் நடைமுறை முஸ்லிம் மத வழக்கத்தில் அசாதாரணமான நிகழ்வு என்றாலும், அது அல்லாவின் நேரடி வாசகங்கள் என்பதால் அதை செல்லாது என்று அறிவிக்க முடியாது. புனித குரான்படி, அது கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை. ஒருவர் மூன்று முறை தலாக் கூறியதும், மனைவி விவாகரத்து பெற்றவரா கிறார். அதன்பின், ‘ஹலாலா’ முறைப்படி அவர் நடந்தால் மட்டுமே, இந்த விவாகரத்து நடை முறையை திரும்பப் பெற்று அவர் மீண்டும் மனைவியாக முடியும். அதாவது விவகாரத்து பெற்ற மனைவி, தனக்கு விவகாரத்து வழங்கிய கணவரை தவிர்த்து வேறு ஆணை தனது விருப்பப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அந்த திருமணம் கணவனின் மரணத்தாலோ, விவாகரத்து நடைமுறையின் மூலமோ முடிவுக்கு வந்தால் மட்டுமே, அவர் முதல் கணவருடன் மீண்டும் சேர முடியும். இந்த நடைமுறை குரானில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகாரம் இல்லை

முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் தலையிட உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. குரான் நடைமுறையை மாற்றுவது அல்லாவின் உத்தரவை மீறும் செயலாகும்; புனித நூலை அவமதிக்கும் செயலாகும். அல்லாவின் உத்தரவை மீறும் முஸ்லிம் ஒருவர் பாவம் செய்தவராகி விடுவார்.

முஸ்லிம் மதத்தைப் பின்பற்றும் ஒருவர் அல்லாவின் உத்தரவையும் குரானில் கூறப்பட்டுள்ள நடை முறைகளையும் பின்பற்றுவது கட்டாயம். எதைச் செய்யக் கூடாது என்று குரான் சொல்லியிருக்கிறதோ, அதை செய்யாமல் இருப்பதும் முஸ்லிம் ஒருவரின் கடமை. மேலும், தலாக் முறையை ரத்து செய்தால், குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் சொத்துரிமையும் பாதிக்கப்படும். இந்த நடைமுறையை ரத்து செய்வது குரானை திருத்தி எழுதும் செயலாகும். இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படையையே மாற்றி அமைத்துவிடும். எனவே, தலாக் நடைமுறையை ரத்து செய்யக் கூடாது.

இவ்வாறு முஸ்லிம் வாரியம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in