ஆர்எஸ்எஸ் தலைவருக்கு உ.பி. ஆளுநர் விருந்து: அரசியல் கட்சிகள் கண்டனம்

ஆர்எஸ்எஸ் தலைவருக்கு உ.பி. ஆளுநர் விருந்து: அரசியல் கட்சிகள் கண்டனம்
Updated on
2 min read

உத்தரப் பிரதேச ஆளுநர் ராம் நாயக், தனது மாளிகையில் ஆர்எஸ்எஸ் தலை வருக்கு விருந்து அளித்ததற்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

லக்னோவில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) அமைப்பின் தேசிய கூட்டம் கடந்த 13-ம் தேதி தொடங்கியது.

இதில் பங்கேற்ற அதன் தலைவர் மோகன் பாகவத்துக்கு, ராம் நாயக் நேற்று முன்தினம் இரவு விருந்து அளித்தார். சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்த விருந்து இரவு 9.30 மணிக்கு முடிந்துள்ளது.

இதுகுறித்து உபி ஆளுநர் மாளிகை செய்தி தொடர்பாளர் கூறும்போது, “ஏற் கெனவே நன்கு அறிந்தவர் என்பதாலும், இருவரும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் கள் என்பதாலும் ஆர்எஸ்எஸ் தலைவ வருக்கு தனிப்பட்ட முறையில் ஆளுநர் இரவு விருந்து அளித்தார். இது அதிகாரப் பூர்வமானது அல்ல” என்றார்.

ஏற்கெனவே, விஜயதசமி அன்று தம் அமைப்பினர் முன்னிலையில் பேசிய பாகவத்தின் பேச்சை, தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்தது சர்ச்சைக்குள்ளான நிலையில், ஆளுநர் விருந்து அளித்ததும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.

காங்கிரஸ் விமர்சனம்

இதுகுறித்து ‘தி இந்து’விடம் உபி மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அகிலேஷ் பிரதாப் சிங் கூறும்போது, “மாநில ஆளுநர் என்பவர் அனைவருக் கும் பொதுவானவர். இவர் தனது அரசு மாளிகையில் ஓர் இந்துத்துவா அமைப்பின் தலைவருக்கு விருந்து வைப்பது முறையல்ல. ஏற்கெனவே 1990-களில் உபி ஆளுநராக இருந்த சூரஜ்பான், இந்துத்துவா ஆதரவு பத்திரி கையின் விழாவை தனது மாளிகையில் நடத்த அனுமதி அளித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அது கைவிடப்பட்டது” என்றார்.

பகுஜன் சமாஜ் கண்டனம்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், தேசிய பொருளாளருமான அம்பேத்ராஜன் கூறும்போது, “ஆளுநர் மாளிகை என்பது தேர்தல் ஆணையத்தைப் போல் பொதுவான அரசு அமைப்பாகக் கருதப்படுகிறது. இதுபோன்ற இடங்களில் அளிக்கப்படும் விருந்து, அரசு சார்பானதாகத்தான் கருதப்படும். ஆளுநர் ராம் நாயக், தனிப்பட்ட முறையில் விருந்து கொடுக்க விரும்பி இருந்தால் மகராஷ்டிராவில் உள்ள தனது வீட்டில்தான் கொடுத்திருக்க வேண்டும். இந்து அமைப்பின் தலைவரை அழைத்து ஒரு மாநில ஆளுநரே விருந்து அளித்து, அரசியல் ஆலோசனை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது” என்றார்.

அமித் ஷா பங்கேற்பு

வரும் 23-ம் தேதி வரையில் பத்து நாட்களுக்கு நடைபெறும் ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் தமிழகம் உட்பட தேசிய அளவிலான நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷாவும் கலந்து கொள்ள இருப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது. அப்போது, ஆர்எஸ்எஸ் அமைப்பின் அங்கங்களான அகில பாரத வித்யா பரிஷத், விஷ்வ இந்து பரிஷத், பாரதிய மஸ்தூர் சங் மற்றும் வித்யா பாரதி ஆகிய அமைப்புகளின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

தீபாவளி நாளன்றும் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்களான சுரேஷ் சோனி, ‘பய்யாஜி’ என அழைக்கப்படும் சுரேஷ் ஜோஷி, கிருஷ்ண கோபால் மற்றும் மன்மோகன் வைத்யா ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

மகாராஷ்டிர மாநில பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சரு மான ராம் நாயக், கடந்த ஜூலை மாதம் உபி புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in