

பாட்னா தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர்களில் ஒருவர், தேசியப் புலனாய்வு அமைப்பின் பிடியிலிருந்து தப்பியோடி, பின்னர் பிடிபட்டார்.
பாட்னா தொடர் குண்டுவெடிப்பில் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேரில் ஒருவர் மெஹரே ஆலம். இவர், தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதையடுத்து, பாட்னாவில் இருந்து 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள முசாபர்பூர் நகரில் புலனாய்வு அமைப்பு அதிகாரிகளிடம் இருந்து மெஹரே ஆலம் தப்பியதாக தகவல்கள் வெளியாகின.
தாம் அவசரமாக கழிவறை செல்ல வேண்டும் என்று அவர் கூறியதாகவும், அதற்கு அனுமதித்தபோது அவர் தப்பிச் சென்றதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், தப்பியோடிய ஆலமை இன்று மாலை கான்பூரில் ரயிலில் பிடிபட்டதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
பாட்னா காந்தி மைதானத்தில் நரேந்திர மோடி பொதுக்கூட்டத்தில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட மெஹரே ஆலம், இந்தியன் முஜாகுதீன் தீவிரவாத அமைப்பின் கமாண்டர் என நம்பப்படுபவரும், குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்டவர் என சந்தேகிக்கப்படுபவருமான தெசீன் அக்தருக்கு உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலையில் புத்தகயாவில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களும் ஆலமுக்கு தொடர்பு இருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகித்தது கவனத்துக்குரியது.