வன்முறையை கைவிட தயாராக இருந்தால் பேச்சுவார்த்தை நடத்த தயார்: மெகபூபா முப்தி திட்டவட்டம்

வன்முறையை கைவிட தயாராக இருந்தால் பேச்சுவார்த்தை நடத்த தயார்: மெகபூபா முப்தி திட்டவட்டம்
Updated on
2 min read

காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதி தீர்வு காண உதவும் வகையில் வன்முறையை கைவிட தயாராக இருக்கும் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று மாநில முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்தார்.

இது தொடர்பாக பிடிஐக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

வன்முறையை கைவிட யார் தயாராக இருந்தாலும் அமைதி தீர்வுகாணவும் உதவினால் அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க தயாராக இருக்கிறோம். காஷமீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் உண்மையாக இருந்தால் பிரிவினைவாத தலைவர்களையும் பேச்சுவார்த்தையில் சேர்க்கத் தயார்.

அதற்குமுன் பேச்சுவார்த்தை நடத்த வசதியாக மாநிலத்தில் நல்ல சூழல் ஏற்படவேண்டும் ஆனால் ஒரு சிலர் பாதுகாப்புப்படை முகாம்கள் மீது தாக்குதல் நடத்தும்படி இளைஞர்களை தூண்டிவிடுகின்றனர். அவர்கள் அதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

பேச்சுவார்த்தைக்கான திட்டம் கடந்த காலத்தில் இருந்ததை விட சிறப்பாக இருககவேண்டும். பணிக்குழுக்களை அமைத்து அதில் பேச்சுவார்த்தைக்கான பிரதிநிதிகளை சேர்ப்பது முந்தைய வழக்கம்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண முழுமனதுடன் பாடுபட்டார். ஒரு பக்கம் பாகிஸ்தானுடன் மறுபக்கம் உள்நாட்டு அளவில் ஹுரியத், ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்புடனும் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்தார். அவர் விட்டுச்சென்ற முனையிலிருந்து முயற்சி தொடர்வது முக்கியம்..

பேச்சுவார்த்தையில் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். கவலை தரக்கூடிய இந்த விவகாரத்தை பிரதமரிடம் தெரிவித்தேன்..

அடுத்த தரப்பினருடன் எடுத்துச்சொல்லி புரியவைக்கக் கூடிய மதிப்பு மிக்க மனிதர்களை இதில் இணைப்பது அவசியமாகும்.

காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரு வகையான தீர்வு காண்பதில் விருப்பம் இருப்பதை பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் வெளிப்படுத்தி உள்ளனர்.

தீர்வு சில நாள்களிலோ அல்லது மாதங்களிலோ வந்துவிடாது என்பதை பிரச்சினைக்கு தீர்வு காண விரும்புவோர் புரிந்துகொள்ள வேண்டும். தீர்வு வரும்வரை அன்றாட வாழ்க்கை துயரம் மிக்கதாக இருப்பது சரியல்ல. சிறுவர்கள் இரையாகக் கூடாது. இதையெல்லாம் நினைத்துப் பார்க்கவேண்டும்.

பேச்சுவார்த்தை தொடங்கும் முன் அமைதி நிலைமை ஏற்படுவது முக்கியம்.

வன்முறையில் எதையும் சாதிக்கமுடியாது, உலகம் ஒட்டுமொத்தமும் வன்முறையினால் சோர்வடைந்துள்ளது. வன்முறையின் குரல்களை கேட்க யாரும் தயாராக இல்லை. எனவே அமைதியாகத் தீர்வு காணப்பட வேண்டிய விவகாரம் அமைதியான முறையில்தான் தீர்வு காணப்பட வேண்டும்.

ஹுரியத் தலைவர்கள் இளம் வயதினர் பற்றி தங்கள் சொந்தக் குழந்தைகளைப் பற்றி யோசிப்பது போல் யோசிக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் முகாம்களைத் தாக்க அனுமதித்தால், அவர்களை உணர்ச்சிவயத்திற்கு ஆட்படுத்தினால், மேலும் இதுதான் காஷ்மீருக்கு தீர்வு என்றால் நாம் நேர்மையாக இல்லை என்றே அர்த்தம். நாம் அவர்களை தவறாக வழிநடத்தி அபாயகரமான இடத்துக்குக் கொண்டு செல்கிறோம்.

பாதுகாப்புப் படை முகாம்களை தாக்குவது ஒருபோதும் நடைபெற கூடாது. ஹுரியத் தலைவர்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி உயிர்ப்பலிகளை தடுக்க வேண்டும். வன்முறையை விரும்பும் இவர்கள் யார்? விஷயத்திற்கு தீர்வு காண விரும்புபவர்கள் 27 ஆண்டுகளாக வன்முறைகளை புரிந்து கொண்டவர்கள் பலிகளை தவிர வேறு எதையும் சாதிக்கவில்லை. எதையும் தீர்க்கவும் இல்லை.

மிக நீண்ட காலத்திற்குப் பிறகு பிரச்சினைகளை புரிந்து கொள்ளும் பிரதமர் உள்ளார். அவர் தன்னளவில் இயன்றதை முயற்சி செய்கிறார். லாகூருக்குச் செல்லும் பிரதமர் நம்மிடையே உள்ளார் ஆனால் துரதிர்ஷ்டவசமாக பதான்கோட் தாக்குதல் நடைபெறுகிறது.

எந்த ஒரு பிரதமருக்கும் காஷ்மீர் பிரச்சினை ஒரு சவால்தான். காஷ்மீரி மக்கள்தான் ஊடுருவல்காரர்களை (பாகிஸ்தான்) விரட்டி அடித்தனர். பாகிஸ்தானுக்கு எதிராக எழுந்து நின்றனர், ஆனால் எங்கோ எதுவோ நடந்து விட்டது, நிறைய நம்பிக்கையின்மைகள் தோன்றிவிட்டன.

இவ்வாறு கூறினார் மெஹ்பூபா முப்தி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in