Published : 10 Sep 2016 07:51 AM
Last Updated : 10 Sep 2016 07:51 AM

கர்நாடகவில் தமிழ் நாளிதழ்கள் எரிப்பு: தமிழ் சேனல்களுக்கு தடை

கன்னட அமைப்பினரின் எதிர்ப்பைத் தொடர்ந்து கர்நாடகா முழுவதும் அனைத்து தமிழ் சேனல்களுக்கும் கேபிள் ஆப ரேட்டர் சங்கம் தடை விதித்த‌து. இதனிடையே கன்னட அமைப்பி னரின் மிரட்டலை அடுத்து நேற்று கர்நாடகாவில் பெரும்பாலான இடங்களில் தமிழ் செய்தித் தாள்களும், பத்திரிகைகளும் விற்பனை செய்யப்படவில்லை. மேலும் பெங்களூரு டவுன் ஹால் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர் தமிழ் நாளிதழ்களை தீயிட்டு கொளுத்தினர்.

கன்னட அமைப்புகளின் எதிர்ப் பின் காரணமாக பெங்களூருவில் உள்ள நாளிதழ் அலுவலகங்களில் தமிழில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகைகள் நீக்கப்பட்டன.

இதனிடையே கன்னட ரக்ஷன‌ வேதிகே அமைப்பை சேர்ந்த தர்மேந்திரா என்பவர் கன்னட தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தை கண்டித்து கன்னடர்கள் நடத்தும் போராட்டத்துக்கு கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்கள் முழு ஆதரவு தர வேண்டும். தமிழ் அமைப்பினர் கன்னடர்களைப் போல வீதிக்கு வந்து போராட வேண்டும். இல்லையென்றால், 1991-ல் நடந்த காவிரி கலவரத்தில் தமிழர்களை வீடு புகுந்து தாக்கியதைப் போல தாக்குவோம். தமிழர்களின் தொழில் நிறுவனங்களை அழிப்போம்'' என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.

மிரட்டலால் அச்சமடைந்த தமிழ் அமைப்பினர் கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர், பெங்களூரு மாநகர காவல் ஆணையர் ஆகியோரிடம் உரிய பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர்.

“தமிழக முதல்வர் ஜெயலலிதா கர்நாடக தமிழர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் முறையிட வேண்டும். மத்திய அரசு தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும்” என கர்நாடக தமிழ் அமைப்பின் மூத்த தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x