

சவுதி அரேபியாவில் வேலையின்றி சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பள நிலுவைக்காக காத்திருக்காமல் தாயகம் திரும்புமாறு வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், "உங்களது கோரிக்கைகளை தூதரகத்தில் பதிவு செய்துவிட்டு உடனடியாக நாடு திரும்புங்கள். உங்கள் பயணச் செலவுகளை அரசு ஏற்கும். சவுதி அரசுடனான நிறுவனங்களின் பேச்சுவார்த்தை நீண்டு கொண்டிருப்பதால் அங்கு காத்திருப்பதில் எந்தப் பயனும் இல்லை. மூடப்பட்ட நிறுவனங்களுடனான சவுதி அரசின் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு உங்கள் அனைவரது சம்பள நிலுவை பிரச்சினையும் தீர்க்கப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பின்னணி:
சவுதி அரேபியாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த நாட்டின் கட்டுமான நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளன. அத்தகைய நிறுவனங்களில் பணியாற்றிய 7700 இந்திய தொழிலாளர்களுக்கு கடந்த 7 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
உணவின்றிப் பரிதவித்த அவர்களுக்காக இந்திய தூதரகம் சார்பில் சவுதி முழுவதும் 20 முகாம்கள் அமைக்கப்பட்டு உணவு, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களைப் பத்திரமாக இந்தியா அழைத்து வருவது தொடர்பாக மத்திய வெளியுறவு துறை இணையமைச்சர் வி.கே.சிங் இந்த மாத தொடக்கத்தில் சவுதி சென்றார். அவரது முயற்சியால் கடந்த 12-ம் தேதி 26 இந்தியர்கள் நாடு திரும்பினர்.
இந்நிலையில் அமைச்சர் வி.கே.சிங் 2-வது முறையாக கடந்த புதன்கிழமை சவுதி சென்றார். ஆனால், பாதிக்கப்பட்டோர், 'வெறும் கையுடன் நாங்கள் நாடு திரும்ப முடியாது. எங்கள் வேலைக்கான சம்பளத்தை நிறுவனங்கள் வழங்க வேண்டும். அதுவரை சவுதியில் இருந்து வெளியேறமாட்டோம்' என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், சவுதி அரேபியாவில் வேலையின்றி சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பள நிலுவைக்காக காத்திருக்காமல் தாயகம் திரும்புமாறு வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தியுள்ளார்.