

இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள நாடு முழுவதும் ஒரு லட்சம் பேருக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
மழை வெள்ளம், நிலச்சரிவு, நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேசிய இயற்கை பேரிடர் மீட்பு குழு சார்பில் நாடு முழுவதும் பொதுமக்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 482 கிராமங்களில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்பு குழு இயக்குநர் ஓ.பி. சிங் கூறியதாவது:
சில பேரிடர்கள் இயற்கையின் சீற்றத்தால் ஏற்படுகின்றன. வேறு சில பேரிடர்கள் மனிதர்களின் தவறுகளால் நேரிடுகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் மழை வெள்ளம், நிலச்சரிவு, நிலநடுக்கம், தீ விபத்துகளால் ஏராளமானோர் உயிரிழக்கின்றனர்.
இதை தடுக்க பொதுமக்களுக்கு சில அடிப்படை பயிற்சிகளை அளித்து வருகிறோம். கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை ஒரு லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆபத்து காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை அவர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளோம். இந்த சிறப்பு பயிற்சி முகாம்கள் நாடு முழுவதும் தொடர்ந்து நடத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.