

இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி ஜம்மு காஷ்மீரில் வாழும் அனைத்து தரப்பு மக்களின் குறைகளை தீர்க்க அரசு தயாராக உள்ளது. அதே சமயம் தேச ஒருமைப்பாட்டில் எந்த சமரசத்துக்கும் இடம் அளிக்க முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இதில் ஆளும் பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட அனைத்து கட்சி களும் பங்கேற்றன. சுமார் 4 மணி நேரம் நீடித்த இந்த கூட்டத் தின்போது, தொடர் வன்முறை களால் துவண்டுபோயுள்ள காஷ்மீர் இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையிலான நடவடிக் கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என்றும், பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்துவதை நிறுத்துவது, ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை தளர்த்துவது, காஷ்மீரின் தற்போதைய நிலவரத்தை ஆராய அனைத்து கட்சி பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அனுப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பின.
இதைத் தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘‘அரச மைப்பு சட்டத்தின்படி அனைத்து தரப்பு மக்களின் குறைகளுக்கும் தீர்வு காண தயாராகவே இருக்கிறோம். அதே சமயம் தேச பாதுகாப்பு, ஒருமைப்பாடு ஆகியவற்றில் எந்த சமரசத்துக்கும் இடம் அளிக்க முடியாது. ஜம்மு காஷ்மீர் மக்களின் நம்பிக்கையை நிச்சயம் நம்மால் வென்றெடுக்க முடியும். காஷ்மீரில் தற்போது நிலவும் வன்முறைக்கு எல்லை தாண்டிய பயங்கரவாதமே காரணம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியாவின் ஒரு பகுதி தான். அங்கும், பலுசிஸ்தானிலும் பாகிஸ்தான் மனித உரிமை மீறல்களை தூண்டி வருகிறது. இதற்காக சர்வதேச சமூகத்திடம் அந்நாடு நிச்சயம் பதில் அளிக்க வேண்டியிருக்கும்’’ என்றார்.
இந்த கூட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு பின் செய்தியா ளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ‘‘பிரச்சினைக்கு தீர்வு காண பிரிவினைவாதிகள் உட்பட காஷ்மீரில் உள்ள அனைத்து தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள் ளோம்’’ என்றார்.
படை குறைப்பு இல்லை
அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாதுகாப்பு காரணங் களால் அங்கு படை குறைப்புக்கு வாய்ப்பு இல்லை. தீவிரவாதம் மற்றும் வன்முறையை ஒடுக்க வலுவான நடவடிக்கைகள் எடுக்கப் படும். மாநிலத்தின் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, பிரிவினைவாதிகள் மற்றும் ஹுரியத் அமைப்பினரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதே போல் பெல்லட் துப்பாக்கி பயன்பாட்டை நிறுத்துவது குறித்து பாதுகாப்பு நிபுணர்கள் குழு ஆராய்ந்து அளிக்கும் அறிக்கையின் அடிப் படையில் இறுதி முடிவு எடுக்கப் படும். இவ்வாறு அவர் கூறினார்.