

மக்களவை, மாநிலங்களவையில் நேற்று அமைச்சர்கள் அளித்த பதில்களின் சுருக்கமான தொகுப்பு:
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்: இந்தியா-பாகிஸ்தான் எல்லையில ஊடுருவலைத் தடுக்க அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்ப உபகரணங்கள் நிறுவப்படும். விரிவான ஒருங்கிணைந்த எல்லை மேலாண்மை அமைப்பு (சிஐபிஎம்எஸ்) எனப்படும் தொழில்நுட்ப முறை சோதனை முறையில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையின் பல்வேறு பகுதிகளில் நிறுவப்படும். தவிர, அதி நவீன கேமரா, ரேடார்கள் மற்றும் இதர கண்காணிப்பு உபகரணங்களும் பொருத்தப்படும். தேசப் பாதுகாப்பு கருதி இவற்றை விரிவாக விளக்க முடியாது.
ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ரூ.30,000 கோடி முதல் 40,000 கோடியை அரசு ஒதுக்குகிறது. இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள், உருவாக்கப்பட்ட சொத்துகள் புவி அடையாளமிடல் முறை (ஜியோடேக்கிங்) மூலம் குறியிடப்படும். இதன் மூலம் செலவிடப்படும் தொகை கண்காணிக்கப்படும். பணம் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும். அட்ச ரேகை, தீர்க்க ரேகை உள்ளிட்ட தரவுகளுடன் பணி செய்யப்பட்ட இடத்தின் விவரங்கள் தொகுக்கப்படுவதால், எதிர்கால மேம்பாட்டுப்பணிகளைத் திட்டமிடுவதற்கும் வசதியாக இருக்கும்.
சுகாதார இணை அமைச்சர் அனுப்ரியா படேல்: உடல் உறுப்புகள் செயலிழப்பு ஏற்படுவோருக்கு உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதற்கு ஆண்டுதோறும் 2 லட்சம் சிறுநீரகங்கள், 30 ஆயிரம் கல்லீரல், 50 ஆயிரம் இதயம், ஒரு லட்சம் கண் விழித்திரை தேவைப்படுகிறது.உடலுறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் பணிக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. உடலுறுப்பு தானத்தின் அவசியத்தை கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பரில் ‘மனதில் இருந்து’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்த ஆண்டு ஆகஸ்ட் 5 வரை 16,192 பேர் உடலுறுப்பு தானம் அளிக்க முன் வந்துள்ளனர். இவர்கள் தேசிய உடலுறுப்பு மற்றும் திசு மாற்று நிறுவனத்தில் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர்.