

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவரது சொத்து மதிப்புகளை அரசு வழக்கறிஞர் நேற்று வெளியிட்டார்.
ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் இளவரசி மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
மாதம் ரூ.1 ஊதியம்
இதில் அரசு வழக்கறிஞர் பவானி சிங் 4-வது நாளாக தனது இறுதிவாதத்தை தொடர்ந்தார்.
1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது, அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்து அன்றைய நிதித்துறை செயலர் ஹிதேந்திர பாபு அளித்த வாக்குமூலத்தை பவானிசிங் வாசித்தார்.
''1991 ஜூன் முதல் 1996 ஏப்ரல் வரை ஜெயலலிதா தனது மாத சம்பளத்தை ரூ.1 ஆக நிர்ணயித்துக்கொண்டார். அதன்படி 1993 செப்டம்பர் 30 வரை ரூ.24 பெற்றுக்கொண்டார். அதன் பிறகு ஊதியம் பெறவில்லை” என்றார்.
பல கோடி மதிப்பில் பங்களாக்கள்
தொடர்ந்து அரசு உதவி வழக்கறிஞர் முருகேஷ் எஸ்.மரடி வாதத்தை தொடர்ந்தார். 1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா, சசிகலா வாங்கிய சொத்துகள், பங்களாக்கள், நடத்திய நிறுவனங்களின் கருவிகள் உள்ளிட்டவற்றை மதிப்பிட்ட வர்களின் வாக்கு மூலத்தை வாசித்தார். “ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு ரூ. 7 கோடியே 50 லட்சம், சிறுதாவூர் பங்களா - ரூ.5 கோடியே 40 லட்சம், பையனூர் பங்களா - ரூ.1 கோடியே 25 லட்சம்” என்றார்.
23 கிலோ நகைகள்
தொடர்ந்து ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைப்பற்றிய தங்க, வைர நகைகளை மதிப்பிட்ட வாசுதேவன் அளித்த வாக்குமூலத்தை வாசித்தார். “23 கிலோ அளவிலான தங்க நகைகளின் மதிப்பு ரூ.3 கோடியே 80 லட்சம், அதுபோல் ரூ. 2 கோடி மதிப்புள்ள வைர ஆபரணங்கள், 1,116 கிலோ வெள்ளிப் பொருட்கள்” என்றார்.
மேலும் சுதாகரன் முதன்மை உரிமையாளராக இருந்த ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் நிறுவனத்துக்கு 1996-ம் ஆண்டின் மதிப்பின்படி ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள கருவிகள் இருந்ததாக தெரிவித்தார்.
நிறுவனங்களில் பங்குதாரர்
மேலும் சைனோரா எண்டர்பிரைசஸ், ஆஞ்சனேயா பிரிண்டரஸ், ராம்ராஜ் அக்ரோ, லெக்ஸ் பிராப்பர்ட்டி, மெடோ அக்ரோ ஃபார்ம் ஆகிய நிறுவனங்களில் ஜெயலலிதா பங்குதாரராக இருந்தார். அதுபோல் சூப்பர் டூப்பர் டி.வி., சசி எண்டர்பிரைசஸ், இண்டோ கெமிக்கல்ஸ், மார்பல்ஸ் அண்ட் மார்பல்ஸ், ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களில் ஜெயலலிதா, சசிகலா சுதாகரன் ஆகியோர் முக்கிய பங்குதாரர்களாக இருந்தனர் என்பதை ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்.
இறுதிவாதம் தொடரும்…
அரசுத் தரப்பு சாட்சிகள் 259 பேரில் 144 பேரின் வாக்குமூலங்களை மட்டுமே அடிப்படையாக வைத்து இதுவரை அரசு வழக்கறிஞர் வாதிட்டுள்ளார். எனவே இன்னும் 4 நாட்களுக்கு அவர் வாதிடுவார் என கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கு விசார ணையை ஏப்ரல் 2-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.