

காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அதற்கு இந்திய ராணுவ வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர்.
பிம்பர் காலி எல்லைப் பகுதிகளில் நேற்று காலை 9.45 மணிக்கு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சிறிய ரக பீரங்கி குண்டுகளை வீசினர்.
இதைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு ராம்கர் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் வீரர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். மதியம் 12.45 மணிக்கு நவுசரா பகுதியில் பீரங்கி குண்டுகள் வீசப்பட்டன.
இந்த 3 பகுதிகளிலும் இந்திய ராணுவ வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். இந்திய தரப்பில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்று எல்லை பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
தீவிரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவச் செய்வதற்காக பாகிஸ்தான் ராணுவம் இதுபோன்று அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. எனினும் எல்லையில் ஊடுருவல்களை முறியடிக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று ராணுவ மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.