தெருநாய்கள் சமூகத்தின் அச்சுறுத்தலாக மாறிவிடக் கூடாது: உச்சநீதி மன்றம்

தெருநாய்கள் சமூகத்தின் அச்சுறுத்தலாக மாறிவிடக் கூடாது: உச்சநீதி மன்றம்
Updated on
1 min read

தெருநாய்களின் மீதான இரக்க குணத்தால், அவை சமூகத்தின் அச்சுறுத்தலாக மாறிவிடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் லலித் தலைமையிலான அமர்வு, ''தெரு நாய்களின் மீது இரக்கம் காட்டலாம். அதே நேரத்தில் அவற்றை சமூகத்தின் அச்சுறுத்தலாக மாறிவிட அனுமதிக்கக்கூடாது. அத்தகைய நேரங்களைக் கையாள்வதில் சமநிலை தேவை'' என்று கூறியுள்ளது.

விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட, விலங்குகள் பிறப்பு கட்டுப்பாடு (நாய்கள்) சட்டம் 2001-ல் கூறப்பட்டுள்ள கருத்துகளின் திருத்தப்பட்ட தொகுதிகளைக் கவனத்தில் கொள்வதாகவும் அமர்வு உறுதியளித்துள்ளது.

வழக்கின் மனுதாரர் கேரளத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சாபு ஸ்டீபன் ஆவார். அவர், ''2001-ல் உருவாக்கப்பட்ட விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், 1960-ல் உருவாக்கப்பட்ட சட்டத்தை முழுமையாக மீறியிருக்கிறது. 1960 சட்டம் தெரு நாய்கள் அழிக்கப்பட வேண்டும் என்பதை அனுமதிக்கிறது. ஆனால் 2001 சட்டமோ தெரு நாய்களுக்கு முழு சுதந்திரத்தை அளிக்கிறது. இது அரசியலமைப்பிற்கு முற்றிலும் விரோதமானது.

நாய்களைக் கட்டுப்படுத்த 59 சட்டங்கள்

நாய்களைக் கட்டுப்படுத்தவும், அழிக்கவும் 59 சட்டங்கள் இருந்தன. ஆனால் 2001 சட்டம் அமலுக்கு வந்தவுடன் அவையனைத்தும் பயனற்றுப் போய்விட்டன'' என்று கூறியுள்ளார்.

ஸ்டீபனின் மனுவைக் குறிப்பிட்டுப் பேசிய நீதிபதி மிஸ்ரா, இது 2001 சட்டத்தையே கேள்விக்கு உட்படுத்துவதால் அவரின் மனுமுதலில் விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறி, வழக்கின் விசாரணையை அக்டோபர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்திய விலங்குகள் பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஆனந்த் க்ரோவர், ''நாய்களின் தூய்மை மற்றும் நோய்த்தடுப்புக்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்த முழு விளக்க அறிக்கையை மாநிலங்கள் சமர்ப்பிக்க வேண்டும். கேரளாவில் மட்டும்தான் தெரு நாய்கள் அச்சுறுத்தல்கள் இருக்கின்றனவா, மற்ற மாநிலங்களில் இல்லையா'' என்று கேள்வி எழுப்பினார்.

கேரளாவில், தெருவில் நடந்து செல்வோரை நாய்கள் கடித்துக் குதறி காயப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவதையடுத்து, ஆபத்தான நாய்களை கொல்ல அம்மாநில அரசு முடிவு செய்தது. இதற்கு சமூக நல அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in