Last Updated : 23 Oct, 2013 09:48 AM

 

Published : 23 Oct 2013 09:48 AM
Last Updated : 23 Oct 2013 09:48 AM

செவ்வாயும் சேர்ந்ததே நமது விண் ஆய்வு - ராதாகிருஷ்ணன் சிறப்பு பேட்டி

இன்னும் சில நாள்களில் செவ்வாய் கிரக ஆய்வுப் பயணத்தை இந்தியா முதல்முறையாக மேற்கொள்ளப்போகிறது. இந்த ஆய்வுக்காக இந்திய விண்கலங்கள் மீக நீண்ட தொலைவு விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டாக வேண்டும். ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பா மட்டுமே ஈடுபட்டுள்ள ஆய்வில் இப்போது இந்தியாவும் சேர்ந்துகொள்கிறது. இந்த ஆய்வுபற்றி விரிவாகப் பேசுகிறார் ‘இஸ்ரோ’தலைவர் கே. ராதாகிருஷ்ணன்.

இந்த செவ்வாய் கிரக ஆய்வு நமக்குத் தேவைதானா? 450 கோடி ரூபாய் செலவு பிடிக்கும் இந்த ஆய்வு அவசரக்கோலத்தில் மேற்கொள்ளப்படுகிறது. தண்டச் செலவு, நாங்களும் செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்தோம் என்பதற்காக மேற்கொள்ளப்படுகிறது என்றெல்லாம் விமர்சிக்கிறார்களே? ‘இந்த ஆய்வுக்காக சிறியதான பி.எஸ்.எல்.வி. ஏவுகலத்தைப் (ராக்கெட்) பயன்படுத்துவது சரியல்ல’என்று உங்களுக்கு முன்னர் இஸ்ரோ தலைவராக இருந்த ஜி. மாதவன் நாயர் குறை கூறியிருக்கிறாரே?

இந்திய விண்வெளி அறிவியலுக்கான ஆலோசனைக் குழு சந்திரன், செவ்வாய், சூரியன் ஆகியவற்றை ஆராய வேண்டும் என்று ஏற்கெனவே திட்டம் வகுத்திருக்கிறது. அறிவியல்பூர்வமாகவும் தொழில்நுட்பரீதியிலும் இத்தகைய ஆய்வுகளை நாம் மேற்கொள்ளாமல் இருக்க முடியாது. செயற்கைக்கோள்களை அனுப்புவது, செயற்கைக்கோள்களை விண்ணில் கொண்டுபோய் நிறுத்த உதவும் ஏவுகலங்களைத் தயாரிப்பது, கோள்களை ஆராய்வது ஆகியவற்றை நாம் செய்துவருகிறோம். விண்வெளி ஆய்வின் எல்லா அம்சங்களும் நமக்கு முக்கியம்.

இந்திய விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் நாம் முன்னுரிமை தரும் விஷயங்களுக்கும் அதனால் சமூகத்தில் பயன்படும் தகவல் தொழில்நுட்ப மேம்பாடுகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டால் நாம் செய்யும் செலவுகளைப் போல பல மடங்கு பலன்களைச் சமூகம் பெறுகிறது. தொலையுணர் கருவிகளின் பயன்பாடு, செலுத்தப்பட்ட ஏவுகலங்களையும் பிறகு செயற்கைக்கோள்களையும் கட்டுப்பாட்டில் வைத்துச் செயல்பட வைப்பது ஆகிய தொழில்நுட்பங்கள் அந்த ஆய்வுக்கு மட்டுமல்லாமல் பிற செயல்களுக்கும் பெரிதும் பயன்படுகி்ன்றன. (எனவே, எதுவும் தண்டச் செலவு இல்லை). ‘சந்திரயான்’, ‘ஆஸ்ட்ரோசாட்’ ஆகியவற்றை அடுத்து செவ்வாய் கிரக ஆய்வு நமது மூன்றாவது முன்னுரிமை ஆய்வுத் திட்டங்களாகும்.

இஸ்ரோவின் செலவில் 55% செயற்கைக்கோள்கள் தயாரிப்புக்கும் 35% ஏவுகலங்கள் தயாரிப்புக்கும் 7% முதல் 8% வரை கோள்களின் ஆய்வுக்கும் செலவாகிறது. 7% நமது சூரிய குடும்பம் குறித்த ஆய்வுகளுக்காகச் செலவிடப்படுகிறது. இந்த ஆய்வுகள் பல்வேறு ஆக்கப்பூர்வமான பயன்பாடுகளுக்கும் உதவுகிறது. உதாரணமாக, புயல் சின்னம் தோன்றுவது முதல் அது வலுப்பெற்று கடக்கும் வரை அதைக் கண்காணித்து எச்சரிக்கவும் சேதத் தடுப்புப் பணிகளை முடுக்கிவிடவும் உதவுகிறது. செவ்வாய் கிரக ஆய்வுபோல எந்த ஒரு முயற்சிக்கும் பின்னால் பயன்தரும் நோக்கம் ஒன்று இருக்கிறது.

பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் விண்வெளி ஆய்வுக்கு நாம் எப்படிச் செலவுசெய்கிறோம்?

செலவை மட்டும் பார்க்காமல் ஒட்டுமொத்தச் சமூகத்துக்கும் கிடைக்கும் பயன்களைப் பார்க்க வேண்டும். நாட்டின் தேசிய வரவுசெலவுத் திட்டத்தில் (பட்ஜெட்) இஸ்ரோவுக்கு ஒதுக்கப்படும் தொகை வெறும் 0.34% தான். சர்வதேச அளவில் ஒப்பிட்டால்கூட மிகமிகக் குறைவு. செவ்வாய் கிரக ஆய்வுகூட மிகக் குறைந்த செலவில்தான் மேற்கொள்ளப்படுகிறது. பிற நாடுகளில் இந்தியாவுக்கு ஆகும் செலவைப் போல ஐந்து மடங்கு ஆகிறது. அதற்குக் காரணம், வெளிநாடுகளில் பொறியியலுக்கான செலவு மிக அதிகம்.

செவ்வாய் கிரக ஆய்வால் இந்த நாட்டுக்கு, அறிவியலாளர்களுக்கு, இளைஞர்களுக்கு, சாமானிய மக்களுக்கு என்ன பயன் கிடைக்கும்?

செவ்வாய் கிரகத்துக்கு யார், எப்போது பயணம் மேற்கொண்டாலும் பலவித சிக்கல்களை எதிர்கொள்ள நேரும். இஸ்ரோ இந்த ஆய்வை முதல்முறையாக மேற்கொள்கிறது. அமெரிக்கா, ரஷ்யா ஆகியவற்றின் ஆய்வு வரலாற்றைப் பார்த்தால் போகப்போகத்தான் வெற்றிகள் கிடைத்தன என்பது புரியும். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், அவற்றுக்கு 40% அளவுக்குத்தான் வெற்றி கிடைத்திருக்கிறது.

தொழில்நுட்ப நிபுணர்களுக்கு இந்த ஆய்வு நல்ல சவாலாக இருக்கும். அறிவியல் அறிஞர்களுக்கு செவ்வாய் குறித்து அறிந்துகொள்ள நல்ல வாய்ப்பாக அமையும். மிகவும் சிக்கலான, முக்கியமான ஆய்வுகளைக்கூட நம் நாட்டால் மேற்கொள்ள முடியும் என்ற பெருமிதத்தை நம்முடைய சாமானியர்களுக்கும் மாணவர்களுக்கும் இது தரும்.

செவ்வாய் கிரகத்தை நாம் சுற்றிவந்தாலே நம்முடைய பயண நோக்கத்தின் 85% பூர்த்தியாகிவிடும். 30 விதமான நோக்கங்களோடு பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறோம். ஐந்து அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வோம். மீத்தேன் உணர்கருவியின் ஆய்வு மிக முக்கியமானது. செவ்வாயிலிருந்து ஹைட்ரஜனும் டைடிரியமும் எப்படி வெளிப்படுகின்றன என்று வேறு இரு கருவிகள் ஆராயும். செவ்வாயின் மேற்பரப்பு எப்படி இருக்கிறது என்று வண்ண கேமரா படம் பிடித்து அனுப்பும்.

இந்த ஆய்வில் இஸ்ரோ முன்னுள்ள முக்கியமான சவால்கள் என்ன?

இந்த ஆய்வின் எல்லாக் கட்டங்களுமே நெஞ்சுரத்தைச் சோதிப்பவை, சவாலானவை. ஏவுகலனை மேலே உந்தித் தள்ளும் தொழில்நுட்பம் தொடங்கி, அதை வழிநடத்திச் செல்வது, செவ்வாய் கிரகத்திலிருந்து தகவல்தொடர்பு ஏற்பட ஆகும் 40 நிமிஷ தாமதம், ஆய்வுக்குத் தயார்செய்தல் என்று ஆய்வின் எல்லா அம்சங்களுமே சவால் நிறைந்தவை. நவம்பர் 29-ல் ஏவுகலத்தை ஏவிய மறுநாள் மிக முக்கியமானது. அப்போதுதான் ஏவுகலம் புவியின் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு விண்ணுக்குச் சென்றிருக்கும். அந்த ஒரு நாளில் தவறவிட்டால் அதற்குப் பிறகு 26 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான ‘நாசா’இதில் உங்களுக்கு எப்படி உதவுகிறது?

விண்கலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும், அது கண்ணில் பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். பெங்களூருவுக்கு அருகே பையலாலு என்ற இடத்தில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தை இதற்குப் பயன்படுத்துவோம். செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் அதைக் கொண்டுபோய் நிறுத்துவதற்கு முன்னால் நாசாவின் உதவியும் அதன் மூன்று சர்வதேசத் தரைக்கட்டுப்பாட்டு நிலையங்களின் உதவியும் நமக்குத் தேவைப்படலாம்.

இந்த 300 நாள் பயண ஆய்வுத் திட்டத்தின்போது ஏற்படக்கூடிய ஆபத்துகளுக்கு எந்த மாதிரியான அவசரகாலத் திட்டம் அல்லது பாதுகாப்புத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது?

அவசர காலத் திட்டம் என்பது எல்லா விண்வெளி ஆய்வுத் திட்டங்களிலும் ஒரு பகுதியாகும். இம்மாதிரி இன்னொரு கிரகத்தை நாடிச் செல்லும் பயணங்களில் அது விரிவானதாக இருக்கும். மாற்றுத் திட்டம் ஒன்றல்ல, பல தயாரிக்கப்பட்டு,சோதிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. திட்டமிட்டபடி சரியாக நடக்காவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள அனைவருக்குமே தெரியும்.

செவ்வாய் கிரகத்துக்குப் பிறகு என்ன?

இப்போதைக்கு நிலவு, செவ்வாய், சூரியன்தான் எங்கள் திட்டத்தில் உள்ளன. எமது ஆய்வுக்கூட அறிவியல் ஆய்வர்கள் இந்தப் பேரண்டத்தையே தினமும் ஆய்வுசெய்துகொண்டுதான் இருக்கின்றனர். மிகப் பெரிய அறிவியல் நோக்கம் இருந்தால் கூட்டாகச் செயல்படுவதற்கு மற்றவர்களையும் தேட வேண்டியிருக்கும். இந்த ஆய்வில் நாங்கள் எப்படி வெற்றிபெறுகிறோம் என்பதைப் பொறுத்துதான் மற்ற ஆய்வுகள். சந்திரயான்-2 என்ற திட்டம் இருக்கிறது. 2016-ல் அதை மேற்கொள்ள முடியும் என்று நம்புகிறோம்.

தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x