Published : 17 Dec 2013 12:00 AM
Last Updated : 17 Dec 2013 12:00 AM

பெண் வழக்கறிஞர் வாக்குமூலம்: கங்குலிக்கு நெருக்கடி

பாலியல் புகாரில் சிக்கிய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலிக்கு நெருக்கடி முற்றுகிறது.

மேற்கு வங்க மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் பதவியிலிருந்து அவர் உடனடியாக விலக வேண்டும். ஏ.கே.கங்குலி மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி மேற்கு வங்கத்தின் அலிப்பூரில் அமைந்துள்ள மனித உரிமை ஆணைய அலுவலகம் அருகே மனிதச் சங்கிலி, தர்ணா உள்ளிட்ட போராட்டங்களில் பெண்களும் வழக்கறி ஞர்களும் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி இரவு ஹோட்டல் ஒன்றில் தன்னிடம் ஏ.கே.கங்குலி தவறாக நடந்து கொண்டதாகவும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் பெண் பயிற்சி வழக்கறிஞர் ஒருவர் புகார் தெரிவித்தார்.

இது தொடர்பாக விசாரணை செய்த உச்ச நீதிமன்ற மூவர் குழு, “பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றிய பெண்ணிடம் ஏ.கே. கங்குலி முறை தவறி நடந்துகொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு போதிய முகாந்திரம் உள்ளது” என்று தெரிவித்தது.

இந்நிலையில், ஹோட்டல் அறையில் தவறாக நடந்துகொண்ட ஏ.கே.கங்குலியின் செயல் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் பிரமாணப் பத்திரத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங் பகிரங்கப்படுத்தி யுள்ளார்.

இது தொடர்பாக இந்திரா ஜெய்சிங் கூறியதாவது: “பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் சம்மதத்தைப் பெற்றுத்தான் இந்த ஆவணத்தை வெளியிட்டுள்ளேன். ஏ.கே.கங்குலி பதவி விலக மறுத்தால், அவரை நீக்க குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளேன்” என்றார்.

பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பயிற்சி பெண் வழக்கறி ஞரின் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

கால்பந்து கூட்டமைப்பு தொடர்பாக அறிக்கை ஒன்றை தயாரிக்க வேண்டும் என்று டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி இரவு 8 – 10.30 மணியளவில் ஏ.கே.கங்குலி என்னை அழைத்தார். அடுத்த நாள் காலையில் அறிக்கையை தர வேண்டியிருப்பதால், அன்று இரவு ஹோட்ட லிலேயே தங்கியிருந்து பணி யாற்றுமாறு கேட்டுக் கொண்டார்.

ஆனால், அதற்கு மறுப்புத் தெரிவித்தேன். விரைவாக பணியை முடித்துக் கொண்டு, எனது விடுதி அறைக்கு திரும்ப வேண்டும் என்று கூறினேன்.

ஆனால், அதை பொருட்படுத்தாத ஏ.கே.கங்குலி, மது பாட்டிலை எடுத்துக் கொண்டு, இன்னும் நிறைய நேரம் இருப்பதால், தான் மது அருந்தும்வரை சற்று ஓய்வு எடுத்துக்கொள்ளுமாறு கூறினார். தர்மசங்கடமான சூழ்நிலையில் நான் இருந்தேன்.

பின்னர், அவர் என்னைப் பார்த்து, “நீ மிகவும் அழகாக இருக்கிறாய்” என்றார்.

உடனடியாக அவருக்கு மறுப்புத் தெரிவிக்கவும், அந்த அறையை விட்டு வெளியேறவும் முயன்றேன். அப்போது எனது கையை பிடித்துக் கொண்ட ஏ.கே.கங்குலி, “நீ என்னை மிகவும் கவர்ந்துவிட்டாய். உன்னை நான் மிகவும் விரும்புகிறேன்; காதலிக்கிறேன்” என்றார். எனது கரங்களில் முத்தமிட்டார். என்னை கட்டியணைக்க முயற்சித்தார். என்னை காதலிப்பதாக மீண்டும் மீண்டும் கூறினார். அந்த அறையிலிருந்து உடனடியாக வெளியேறிவிட்டேன்’ என்று அந்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிடிஐ செய்தி யாளரிடம் ஏ.கே.கங்குலி திங்கள்கிழமை கூறியதாவது: “உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழுவிடம் அளிக்கப்பட்ட அந்த பெண்ணின் பிரமாணப் பத்திரம் ஒரு ரகசிய ஆவணமாகும். அதை எப்படி பகிரங்கமாக வெளியிடலாம்” என்று கேள்வி எழுப்பினார்.

மத்திய சட்டத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறியிருப்பதாவது: “குற்றச்சாட்டுக்குள்ளானது முன்னாள் நீதிபதியோ அல்லது சாதாரண மனிதரோ – யாராக இருந்தாலும், அவர்கள் மீது உச்ச நீதிமன்றம் கடுமை யான நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x