

சென்னை சுவாதி கொலை சம்பவத் தைப் போன்றே, தெலங்கானா மாநிலம் அதிலாபாத்தில் நேற்று முன்தினம் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. காதலிக்க மறுத்த 17 வயதுப் பெண் பலர் முன்னிலையில் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டார். கொலையாளியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் அதிலாபாத் மாவட்டம் பைன்ஸாவைச் சேர்ந்தவர் சந்தியா (17). இவரை பக்கத்து வீட்டைச் சேர்ந்த மகேஷ் (22) என்பவர் காதலித்துள்ளார். ஆனால், சந்தியா மறுப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை மதியம் ஏராளமான பொதுமக்கள் கண்எதிரில், காய்கறி நறுக்கும் கத்தியால் சந்தியாவை அவரது வீட்டு வாசலிலேயே சரமாரியாக கழுத்தில் குத்தினார் மகேஷ். இதில், சந்தியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகேஷ் அங்கிருந்து தப்பியோடினார். அவரை போலீஸார் கைது செய்தனர்.
ஒருதலைக் காதல்
மகேஷ், சந்தியாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அவருக்கு அடிக்கடி தொந்தரவு கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சந்தியா காவல் துறையில் மகேஷ் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் புகார் தெரிவித்துள்ளார்.
மகேஷ் மீது நடவடிக்கை எடுக் காமல், போலீஸார் இருதரப்புக்கும் சமரசம் செய்து வைத்துள்ளனர். கடந்த ஜனவரியில் சந்தியாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்ற போது அதைத் தடுக்க மகேஷ் பிரச்சினை செய்துள்ளார். தனக்கு கிடைக்காத சந்தியா வேறுயாருக்கும் கிடைக்கக் கூடாது என்பதற்காக, மகேஷ் அவரை வெட்டிக் கொன்றுள்ளார்.