Published : 08 Oct 2014 11:39 AM
Last Updated : 08 Oct 2014 11:39 AM

மோடிக்கு பாராட்டு: சசி தரூர் மீது கேரள காங். நடவடிக்கை

பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டிப் பேசிய காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கட்சி மேலிடத்திற்கு பரிந்துரைக்க கேரள காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

மக்களவை தேர்தலில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் 2-வது முறையாக தரூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது வெற்றிக்காக கேரள காங்கிரஸ் தொண்டர்களும், ஐக்கிய ஜனநாயக முன்னணியினரும் களமிறங்கி கடுமையாக வேலை செய்தனர். ஆனால் அவரோ நரேந்திர மோடியை தாராளமாக பாராட்டி வருகிறார். இது எங்கள் உணர்வுகளை புண்படுத்துகிறது என கேரள காங்கிரஸ் கட்சித் தலைவர் வி.எம். சுதீரன் தெரிவித்தார்.

இது குறித்து முதல்வர் உம்மன் சாண்டி, மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோருடன் கலந்தோலித்த பிறகே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கேரளா, பாஜகவை முழுமையாக புறக்கணித்துள்ளது. அதற்குக் காரணம் கேரள மக்களின் ஜனநாயக, மதச்சார்பற்ற பார்வை. இங்கு காங்கிரஸ் மேலும் பலப்பட வேண்டும் எனவே மக்கள் விரும்புகின்றனர். ஆனால், சசி தரூர் நடவடிக்கைகள் மக்கள் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

பிரதமர் மோடியின் 'ஸ்வச் பாரத்' ( தூய்மை இந்தியா) திட்டத்தில் பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்பை சசி தரூர் ஏற்றார். அதற்கு சசி தரூர் விளக்கமும் அளித்தார். தூய்மை இந்தியா திட்டத்தை ஆதரிப்பதால் தான் எவ்விதத்திலும் பாஜக-வையோ அதன் இந்துத்துவா கொள்கையையோ ஆதரிப்பதாக அர்த்தமில்லை என அவர் தெரிவித்திருந்தார். காங்கிரஸ் கட்சியில் இருப்பதை பெருமையாக கருதுகிறேன் எனவும் தெரிவித்திருந்தார்.

பாஜகவுடன் நெருக்கம் காட்டுவதாக எழுந்த புகார் குறித்த கேள்விக்கு, "இது மிகவும் கேலிக்கூத்தான விஷயம். நான் இதை முழுமையாக நிராகரிக்கிறேன்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x