

சீமாந்திரா மின் வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர். ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டியுடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தனி தெலங்கானா அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து, சீமாந்திராவில் பல்வேறு போரட்டங்கள் வெடித்தன.
உச்சபட்சமாக, கடந்த சனிக்கிழமையன்று சீமாந்திரா மின் வாரிய ஊழியர்கள் 8,000 பேர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். இதனை அடுத்து 13 மாவட்டங்கள் இருளில் மூழ்கின.
போராட்டத்தை வாபஸ் பெறுமாறு கோரி ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி மின் வாரிய ஊழியர்கள் பிரதினிதிகளுடன் நடத்திய 3 சுற்று பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்தன.
இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள பைலின் புயல் நாளை மறுநாள் ஒடிஷா-ஆந்திரம் இடையே கரையை கடக்கிறது. இதனை அடுத்து, வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுமாறு ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி கோரிக்கை விடுத்திருந்தார்.
இன்று, முதல்வர் கிரண்குமார் ரெட்டியுடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மின்வாரிய ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
புயல் எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும், போராட்டத்தை மீண்டும் தொடர திட்டமிட்டிருப்பதாகவும் சீமாந்திரா மின்வாரிய ஊழியர்கள் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட 13 மாவட்டங்களிலும் உடனடியாக மின்விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.