

செவ்வாய் சுற்றுப்பாதைத் திட்டம், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே விண்வெளிப் போட்டி ஏற்பட்டிருப்பதாக விவாதத்தைக் கிளப்பிவிட்டிருக்கிறது. ஆனால், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் ஜி.மாதவன் நாயர், சர்வதேச அளவில் விண்வெளி ஆய்வுத் துறையில் சீனாவின் கை ஏற்கெனவே ஓங்கியிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிடிஐ செய்தியாளரிடம் மாதவன் நாயர் கூறியதாவது:
விண்வெளித்துறையில் சீனாவுடன் இந்தியா போட்டியிடுகிறது, அதனைப் பிடித்து விட்டது என்றும் சிலர் சொல்லி வருகின்றனர். ஆனால் தற்போது நாம் இப்போட்டியில் மிக மோசமாகத் தோற்றிருக்கிறோம்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சீனாவும், இந்தியாவும் விண்வெளித் துறையில் ஏறக்குறைய சமபலம் பொருந்தியவையாக இருந்தன (விண்வெளிக்கு ஆள்களை அனுப்பும் திட்டம் தவிர).
நாமும் கடும் போட்டியளித்தோம். சில தொழில்நுட்பத்தில் குறிப்பாக விண்வெளி தகவல் தொடர்புத்துறை, ரிமோட் சென்சிங் போன்றவற்றில் சீனாவை விட முன்னணியில் இருந்தோம்.
கடந்த 5 ஆண்டுகளாக இந்தியா தூங்கிக் கொண்டிருந்தபோது, சீனா வலுவாக முன்னேறிவிட்டது. விண்வெளிக்குச் சென்று வந்த விண்வெளி வீரர்கள் 10 பேர் அங்கு உள்ளனர். விண்வெளியில் ஆய்வு மையம் அவர்களுக்கு இருக்கிறது; அதன் பாதியளவு பணிகள் முடிந்து விட்டன. 2015 ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும் எனக் கருதுகிறேன்.
25 ஆயிரம் கிலோ எடையைச் சுமந்து சென்று கீழ் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் திறன் கொண்ட கனரக ஏவுகலம் சீனாவிடம் இருக்கிறது. இது போன்ற தொழில்நுட்பங்களுடன், ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் மட்டுமின்றி, உலகளவிலும் விண்வெளித் துறையில் சீனாவின் கை ஓங்கியே இருக்கிறது.
கடந்த 2007, 08 ஆம் ஆண்டுகளில் திட்டமிடப்பட்டவற்றைத்தான் இந்தியா தற்போது செயல்படுத்தி வருகிறது. அந்தத் திட்டங்களும் நத்தை வேகத்தில் செயல்படுத்தப்படுகின்றன. அடுத்த 10 ஆண்டுகளில் இத்துறையில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்ற தெளிவான பார்வை நம்மிடத்தில் இல்லை.
டெலி மெடிசன், டெலி-எஜுகேசன், கிராம வளஆதார மையங்கள் என தாக்கத்தை ஏற்படுத்திய திட்டங்களும் நிறுத்தப்பட்டுவிட்டன.
தொலைத்தொடர்பு டிரான்ஸ ்பாண்டர்களில் மிகக் கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. அதைச் சரி செய்யும் திட்டமே நம்மிடம் இல்லை. நேவிகேஷன் செயற்கைக்கோள் ஒன்று ஏவப்பட்டு விட்டது. ஆனால், அடுத்த செயற்கைக்கோள் இன்னும் ஏவப்படவில்லை.
எனவே, செவ்வாய் கிரகத் திட்டம் என்னைப் பொருத்தவரை, தவறான முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தப்பட்டுள்ளது. என்றார் அவர்.