

சஞ்சய் பண்டாரி என்ற சர்ச்சைக்குரிய ஆயுத விற்பனை இடைத்தரகர், நம் நாட்டின் ரகசிய ராணுவ ஆவணங்களுடன் மாயமானார். இவர் தற்போது லண்டனில் இருப்பதாக தொலைக்காட்சி சேனல் ஒன்று தெரிவித்துள்ளது.
அக்டோபர் 16, 2016-ல் டெல்லி போலீஸார் சஞ்சய் பண்டாரி மீது அதிகாரபூர்வ ரகசிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர், அதாவது இதற்கு முன்னதாக ஏப்ரலில் வருமான வரித்துறையினர் இவரது இல்லத்தில் சோதனை மேற்கொண்ட போது ரகசிய ஆவணங்கள் சிலவற்றைக் கைப்பற்றியதையடுத்து இந்த வழக்கு தொடரப்பட்டது.
சஞ்சய் பண்டாரி வெளிநாடு தப்பிச் செல்லாதிருப்பதற்காக இவரது பாஸ்போர்ட்டை வருமான வரித்துறை முடக்கியது. ஆனால் இவர் நேபாள் வழியாக இந்தியாவை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது. பண்டாரிக்கு எதிரான ரெட் நோட்டீஸை சிபிஐ, இண்டர்போலுக்கு அளித்து கோரிக்கை வைத்தது.
இந்த மாத தொடக்கத்தில் அமலாக்கப் பிரிவினர் பண்டாரி மீது நிதிமுறைகேடு வழக்கு தொடர்ந்தனர். கறுப்புப் பணம் தொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
முன்னதாக அமலாக்கத்துறையினர் இவரை அழைத்து விசாரிக்க அழைப்பாணை விடுத்திருந்தது. ஆனால் அவர் வரவில்லை. எந்த அழைப்பாணைக்கும் வினையாற்றாமல் நாட்டை விட்டு தப்பியோடினார்.
இவர் தனது சொத்துக்களின் பெரும்பாலான பகுதியை துபாயில் உள்ள அறக்கட்டளைக்கு மாற்றியிருக்கலாம் என்று வருமான வரித்துறையினர் சந்தேகித்தனர். பண்டாரியின் கணக்குத் தணிக்கையாளரிடமிருந்து பெற்ற ஆவணங்களின்படி இந்த முடிவுக்கு வருமானவரித் துறையினர் வந்துள்ளனர். பண்டாரி தனது சொத்துகள் பலவற்றை துபாய் அறக்கட்டளைக்கு மாற்றியிருக்கலாம் என்று சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
துபாய் குடிமகன் ஒருவர் பெயரில் இந்த அறக்கட்டளை இயங்குகிறது. அதாவது வரி ஏய்ப்புப் புகலிடங்களில் யாராவது ஒருவர் பெயரில் அறக்கட்டளை இயங்கும் ஆனால் அதன் பின்னணியில் பண்டாரியைப் போல ஏமாற்றுப் பேர்வழிகள் இருப்பது சகஜமான விஷயம்.
பண்டாரிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலும் சரி தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசிலும் சரி முக்கியஸ்தர்களுடன் தொடர்புள்ளதாக தெரிகிறது.
இது குறித்து உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் நேற்று தெரிவிக்கும் போது, பண்டாரி இந்தியாவை விட்டு வெளியேற வழியில்லை.
ஏனெனில் இவரைப்பற்றிய சுற்றறிக்கை அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன, என்றார்.
ஆனால் தற்போது நேபாளம் வழியாக பண்டாரி தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் லண்டனில் இவர் இருப்பதாக தொலைக்காட்சி சேனல் செய்தியும் வெளியாகியுள்ளன.
இந்திய-நேபாள் எல்லை திறந்த எல்லையாகும் இதன் வழியாக இருநாட்டு குடிமக்களும் சுதந்திரமாக போகலாம் வரலாம்.