

போலி ஏடிம் கார்டுகள் மூலம் ரூ.2.50 லட்சம் பணம் எடுக்கப்பட்ட மோசடி விவகாரத்தில் அயல்நாட்டினர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் இண்டர்போல் உதவியை நாடியுள்ளது கேரள மாநில போலீஸ்.
கேரள போலீஸ் உயரதிகாரி பி.சந்தியா கூறும்போது, “விஞ்ஞானபூர்வ தகவல்களை திரட்டியுள்ளோம். பிற மாநில போலீஸையும் நாடியுள்ளோம். இண்டர்போல் உதவியையும் கோரியுள்ளோம்”என்றார்.
கேரள மாநில தலைநகரில் ரஷ்யா மற்றும் கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த சிலர் 10 நாட்களுக்குத் தங்கியிருந்த்து தெரியவந்துள்ளது, இவர்கள் மீது கேரள போலீஸ் சந்தேகக்கண் கொண்டுள்ளது.
தங்கள் பணம் மோசடியாக ஏடிஎம்-லிருந்து எடுக்கப்பட்டது குறித்து 50 புகார்கள் குவிய இந்த விவகாரம் வெடித்தது. போலீஸார் தங்களது ஆரம்பகட்ட விசாரணையில், புகை எச்சரிக்கை சாதனம் போன்ற ஒன்றையும் ஏடிஎம் கார்ட் ரீடர் ஒன்றையும் ஏடிஎம்-ல் வைத்துள்ளது தெரிந்தது.
இந்த மின்னணு சாதனம் வாடிக்கையாளர்களின் PIN எண்ணை படம்பிடித்துத் தருவதாகும். மேலும் ஒரு குறிப்பிட்ட ஏடிஎம் அட்டை விவரங்களையும் சுலபமாகப் பிடித்துத் தந்துள்ளது.
இதனைக் கொண்டு போலி ஏடிஎம் அட்டைகளைத் தயாரித்து நகருக்கு வெளியே உள்ள ஏடிஎம்-களிலிருந்து ரூ.2.50 லட்சம் வரை கொள்ளையடித்துள்ளனர்.
பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்மில் இரண்டு அயல்நாட்டினர் இருப்பதான காட்சிப்பதிவை தொலைக்காட்சி சேனல்கள் வெளியிட்டுள்ளன.
எஸ்பிஐ வாடிக்கையாளர் ஒருவர் கூறும்போது, “ஞாயிறன்று எனக்கு குறுஞ்செய்தி வந்த போது அதிர்ந்து போனேன், எனது கணக்கிலிருந்து 2 நிமிட இடைவெளியில் ரூ.20,000 பணம் எடுக்கப்பட்டுள்ளது. நான் உடனடியாக ஏடிஎம் விரைந்து கணக்கை சரி பார்த்த போது என் பணம் களவாடப்பட்டது தெரியவந்தது. மும்பையில் வொர்லியில் என் பணம் எடுக்கப்பட்டதை பிற்பாடு அறிந்து கொண்டேன்” என்றார்.
இதனையடுத்து சிறப்பு போலீஸ் படை மும்பை விரைந்துள்ளது. மேலும் அனைத்து ஏடிஎம்-களையும் சோதனை செய்ய வங்கிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் நிரந்தர அடையாள எண்ணை மாற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மோசடி கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.