

மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்க உள்ள பாஜகவை சேர்ந்த பட்னாவிஸ், கட்சியில் படிப்படியாக வளர்ச்சியடைந்து இன்று இப்பதவியை எட்டியுள்ளார்.
ஆட்சி நிர்வாகத்தில் பட்னாவிஸுக்கு அனுபவம் இல்லை என்று குறைகூறிய நிதின் கட்கரியின் ஆதரவாளர்கள், கட்கரியை முதல்வராக்க வேண்டுமென்று வலியுறுத்தினர். எனினும் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, ஆர்எஸ்எஸ் அமைப்பின் முழுஆதரவுடன் மகாராஷ்டிரத்தின் முதல்வர் பதவியை பட்னாவிஸ் அடைந்துள்ளார்.
1997-ம் ஆண்டு 27-வது வயதில் நாக்பூர் நகர மேயராக பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் இந்தியாவில் இளம் வயதில் மேயரான 2-வது நபர் என்ற பெருமையை பெற்றார். நாடாளுமன்றத் தேர்தல்களில் மகாராஷ்டிரத்தில் பாஜக-வின் வெற்றிக்கு வித்திட்டதில் பெரும் பங்கு வகித்த பட்னாவிஸ், இப்போது சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டு தனிப்பெரும் கட்சி யாக உருவெடுத்ததில் பெரும் பங்காற்றியுள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது அவரை புகழ்ந்து பேசிய மோடி, “தேவேந்திர பட்னாவிஸ், நாட்டுக்கு நாக்பூர் அளித்த பரிசு” என்றார். ஜனசங்க மற்றும் பாஜக தலைவராக இருந்த, மறைந்த தலைவர் கங்காதர் பட்னாவிஸின் மகன் தேவேந்திர பட்னாவிஸ். ஆர்.எஸ்.எஸ். மாணவர்கள் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் இளம் வயதிலேயே பட்னாவிஸ் இணைந்தார்.
பிறகு 1999-ம் ஆண்டு முதன் முதலாக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு தொடர்ச்சியாக 3 சட்டப்பேரவை தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். பட்னாவிஸ், தனி விதர்பா மாநிலத்தின் ஆதரவாளர். சட்டத்தில் பட்டப்படிப்பும், வர்த்தக மேலாண்மைப் பட்டப்படிப் பும் முடித்துள்ள பட்னாவிஸ் பொரு ளாதாரம் குறித்து 2 நூல்களையும் எழுதியுள்ளார்