Published : 10 Jan 2017 11:24 AM
Last Updated : 10 Jan 2017 11:24 AM

தரமான, போதிய உணவு வழங்கப்படாததாக ராணுவ வீரர் குற்றச்சாட்டு: விசாரணைக்கு ராஜ்நாத் சிங் உத்தரவு

எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு போதிய அளவு உணவு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை படை வீரர் ஒருவரே முன்வைத்துள்ளது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

எல்லை பாதுகாப்புப் படையின் 29-வது பிரிவைச் சேர்ந்த வீரர் டி.பி.யாதவ். இவர் திங்கள்கிழமை சமூக வலைப்பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்தார். அந்த வீடியோவில் அவர், "பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் என்னைப் போன்ற வீரர்களுக்கு மோசமான தரத்தில் உணவு வழங்கப்படுகிறது. சில நேரங்களில் அதுவும் வழங்கப்படாததால் பசியில் தவிக்கிறோம்" என குற்றஞ்சாட்டியிருந்தார்.

அவரது இந்த வீடியோ வைரலானது. பல்வேறு சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு மத்திய அரசுக்கு எதிராக கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. நாட்டைப் பாதுகாக்கும் வீரர்களை அரசு பாதுகாக்கத் தவறுவதாக கருத்துகள் பகிரப்பட்டன.

இந்நிலையில், இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் "எல்லை பாதுகாப்பு வீரரின் துயரத்தை விளக்கும் வீடியோ ஒன்றை கண்டேன். இது தொடர்பாக எல்லை பாதுகாப்பு படையிடம் விளக்கம் கோரி உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை செயலருக்கு உத்தரவிட்டிருக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.