

நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பாஜக அரசு அமைந்து மூன்றாவது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. பிரதமரான பின்னர் மோடி ஆற்றிய முதல் சுதந்திர தின உரை மிக நீண்ட உரை என்று பேசப்பட்டது.
அதற்கு அடுத்த சுதந்திர தினத்தன்று அவரது உரையில் மக்களின் கருத்துகள் இடம் பெற்றிருந்தன. அந்த வகையில் இந்த ஆண்டும் மக்கள் கருத்து கேட்டிருக்கிறார் பிரதமர் மோடி.
'தி இந்து' ஆங்கில இணையதள வாசகர்கள் மோடி சுதந்திர தின உரையில் எவையெல்லாம் இடம் பெற வேண்டும் என்ற ஒரு பட்டியலை அளித்துள்ளனர்.
அவற்றை தொகுத்து வரிசைப்படுத்தியதில் தலித்துகள் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் குறித்து பிரதமர் மோடி சுதந்திர தினத்தன்று பேச வேண்டும் என்ற அதிக அளவிலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
கருத்து தெரிவித்த 1,249 பேரில் அதாவது 19.8% மக்கள் இதை தெரிவித்துள்ளனர். சலீம் என்ற வாசகர் ஒருவர், "பழமைவாத மதக் கொள்கை கோட்பாடுகளை கடைபிடித்துக் கொண்டு நாட்டின் குடிமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது நாகரிக கடிகாரத்தில் நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்லும். இத்தகைய செயல்களால் சர்வதேச அளவில் இந்தியாவின் பெருமை குறையும் வாய்ப்புள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
சகிப்பின்மைக்கு அடுத்தபடியாக கல்வி இடம்பெற்றுள்ளது. கல்விக் கட்டணம், கல்வித் தரம் குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும் என 19.2% வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வளமாக கல்வி நாட்டின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வாகும் என்பது அவர்கள் கருத்தாக இருக்கிறது.
காஷ்மீர் பிரச்சினை, உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாகவும் பிரதமர் பேச வேண்டும் என பலர் வலியுறுத்தியுள்ளனர். இவை தவிர நல்லாட்சி, டிஜிட்டல் இந்தியா தொடர்பான பேச்சுக்களையும் சிலர் பரிந்துரைத்துள்ளனர்.