ரிலையன்ஸ் விவகாரம்: மொய்லி, அம்பானி, தியோரா மீது வழக்குப் பதிவு
ரிலையன்ஸ் எரிவாயு விவகாரத்தில், பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, மத்திய ஹைட்ரோ கார்பன் அலுவலகத்தின் முன்னாள் தலைமை இயக்குநர் வி.கே.சிபல், முன்னாள் அமைச்சர் முரளி தியோரா ஆகியோர் மீது டெல்லி அரசின் கீழ் இயங்கும் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர்.
இயற்கை எரிவாயு விலையை நிர்ணயம் செய்ததில் கூட்டுச்சதியில் ஈடுபட்டதாக வந்த புகாரின்பேரில் இவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்திருந்தார்.
எரிவாயு விலை உயர்வினால், ஒரு வருடத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 54,000 கோடி ரூபாய் லாபமும், அதே அளவுக்கு அரசுக்கு நஷ்டமும் ஏற்பட்டுள்ளது என்றும், இதை ஆய்வு செய்த தலைமை தணிக்கை குழு, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஒவ்வொரு விலை உயர்வின் போதும் 1.25 லட்சம் கோடி ரூபாய் வரை லாபம் கிடைத்திருப்பதாக கூறியுள்ளது என்றும் அவர் கூறியிருந்தார்.
அதன்படி, மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி, தொழிலதிபர் முகேஷ் அம்பானி, முன்னாள் அதிகாரி வி.கே.சிபல் மற்றும் முன்னாள் அமைச்சர் முரளி தியோரா மீது இன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ரிலையன்ஸ் நிறுவனம் மறுப்பு
இதனிடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ள புகார் ஆதரமற்றது என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தப் புகாருக்கு எந்தவிதமான அடிப்படை ஆதரங்களும் இல்லை என்றும், இந்த பொறுப்பற்ற புகாரை மறுக்க சட்டரீதியான நடவடிக்கை எடுத்து தங்கள் நிறுவனத்தின் பெயரையும் புகழையும் காப்போம் என்றும் ரிலையன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
