

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்துவதற்காக, வரும் ஜூலை மாதத்துக்குள் புதிதாக 30 ஆயிரம் விவிபாட் இயந்திரங்களை வாங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்த ஆண்டு இறுதியில் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் தெரிந்து கொள்வதற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் (விவிபாட்) இயந்திரங்களை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு சுமார் 84 ஆயிரம் விவிபாட் இயந்திரங்கள் தேவைப்படுகிறது. இப்போது எங்களிடம் 53,500 இயந்திரங்கள் மட்டுமே கையிருப்பில் உள்ளன. எனவே, வரும் ஜூலை மாதத்துக்குள் 30 ஆயிரம் புதிய இயந்திரங்கள் வாங்கப்படும்” என்றார்.
182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவையின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதியும் 68 உறுப்பினர்களைக் கொண்ட இமாச்சல பிரதேச சட்டப்பேரவையின் பதவிக் காலம் ஜனவரி 7-ம் தேதியும் முடிவடைகிறது. எனவே, இவ்விரு மாநிலங்களிலும் வரும் டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் போது, அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவு இயந்திரத்துடன் விவிபாட் இயந்திரங்கள் இணைக்கப்படும் என தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவிக்கும் எனத் தெரிகிறது.
சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் சந்தேகம் எழுப்பி உள்ளன. குறிப்பாக, மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்தக் கோரி 16 கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளன.
இந்நிலையில், வரும் 2019 மக்களவைத் தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் விவிபாட் இயந்திரங்களை பயன்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கு தேவையான சுமார் 16 லட்சத்து 15 ஆயிரம் இயந்திரங்களை வாங்க ரூ.3,174 கோடியை ஒதுக்க மத்திய அரசு நேற்று ஒப்புதல் வழங்கியது.