

பதான்கோட் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் வரை இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு நடைபெறாது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ஜனவரி 15-ல் நடைபெறும் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் சர்தாஜ் அஜீஸ் சில தினங்களுக்கு முன்னர் உறுதிபடுத்தினார்.
கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட திடீர் பயணத்தின் விளைவாக பேச்சுவார்த்தைக்கு அடித்தளம் அமைந்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவித்த தேதி குறித்து முடிவு எடுக்கப்படவில்லை என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்தார்.
இது தொடர்பாக இன்று (திங்கள்கிழமை) காலை செய்தி சானல் ஒன்றிடம் பேசிய அவர் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படவில்லை என்றும், அதே நேரத்தில் "பதான்கோட் தீவிரவாத தாக்குதல் சம்பவத்துக்கு தொடர்புடையவர்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடு தொடங்கும்" என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
பதான்கோட் தீவிரவாத தாக்குதலால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இரு நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படவில்லை
முன்னதாக, வரும் 15-ஆம் தேதி நடக்க இருந்த இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதாக சில செய்தி ஊடகங்கள் தெரிவித்தன. அதனை பிரதமர் அலுவலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.