

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலி காப்டர் ஊழல் வழக்கில் 2-வது குற்றப்பத்திரிகையை அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ளது. அதில் இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் மற்றும் சில இந்தியர்களின் பங்கு பற்றி குறிப் பிடப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களுக்காக 12 சொகுசு ஹெலிகாப்டர்களை வாங்குவது தொடர்பாக, இத்தாலியின் பின்மெக்கனிக்கா குழுமத்தைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது.
ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற் காக இந்தியர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக இத்தாலி நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பின்மெக்கனிக்கா குழும உயர் அதிகாரிகள் சிலருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. அத்துடன் இந்தியர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்தப் புகார் எழுந்ததும் இந்தியாவிலும் சிபிஐ சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுபோல சட்டவிரோத பணப்பரி வர்த்தனை சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள பிஎம்எல்ஏ சிறப்பு நீதிமன்றத் தில் அமலாக்கத் துறை புதிதாக 1,300 பக்கங்களைக் கொண்ட 2-வது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இடைத் தரகராக செயல்பட்ட மைக்கேல், இந்திய அரசிடமிருந்து ஹெலி காப்டர் ஒப்பந்தத்தைப் பெற்றுத் தருவதற்காக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திட மிருந்து ரூ.225 கோடி லஞ்சம் பெற்றதாக அதில் கூறப்பட்டுள் ளது. இதுகுறித்து நீதிமன்றம் விரைவில் பரிசீலிக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த விவகாரத்தில் மைக்கேலின் பங்கு, அவர் இந்தியாவுக்கு பலமுறை வந்து சென்றது, அவரது பணப் பரிவர்த்தனை மற்றும் இது தொடர்பாக உதவிய இந்தியர்கள் பற்றிய விவரங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. மைக்கேல் தவிர கைடோ ஹாஸ்க் மற்றும் கார்லோ கெரோஸா ஆகிய மற்ற இடைத்தரகர்களின் பங்கு குறித்தும் அமலாக்கத் துறையும் சிபிஐயும் விசாரணை நடத்தி வருகின்றன. இவர்களுக்கு எதிராக இன்டர்போல் அமைப்பு சர்வதேச கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
பிரிட்டனில் வசித்து வரும் மைக்கேலை ஒப்படைக்குமாறு அந்நாட்டு அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது. எனவே, இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தப்படி அவரை நாடு கடத்த வேண்டுமானால் இதுபோன்ற நீதிமன்ற நடவடிக்கை அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.