ஹெலிகாப்டர் ஒப்பந்த விதிகளை மீறியது இத்தாலி நிறுவனம்: ஏ.கே. அந்தோனி

ஹெலிகாப்டர் ஒப்பந்த விதிகளை மீறியது இத்தாலி நிறுவனம்: ஏ.கே. அந்தோனி
Updated on
1 min read

சர்ச்சைக்கு உள்ளாகி உள்ள ஹெலிகாப்டர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி கூறியுள்ளார். இதன்மூலம் இந்த ஒப்பந்தம் ரத்தாக வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து அமைச்சர் அந்தோனி கூறியதாவது:

இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு 21-ம் தேதி அந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 21 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதுவிஷயத்தில் சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை அரசு செய்யும். அதிநவீன பல்நோக்கு பயன்பாடு கொண்ட விமானம் வாங்குவது தொடர்பாக பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த விவகாரத்தில் பல்வேறு நிலைகளில் ஆராய வேண்டி உள்ளது. இதற்காக 4 முதல் 5 நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இந்த நிலையில் ஒப்பந்தம் எப்போது இறுதி செய்யப்படும் என்பதை கணிக்க முடியாது என்றார் அந்தோனி.

இந்த ஒப்பந்தத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக அட்டர்னி ஜெனரல் ஏற்கெனவே பாதுகாப்பு அமைச்சகத்துக்கு தனது கருத்தைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய விமானப்படை சார்பில் முக்கியப் பிரமுகர்கள் பயணம் செய்வதற்கான 12 ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு இத்தாலி-பிரிட்டன் நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்டு உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக சுமார் ரூ.360 கோடி லஞ்சம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in