

வரும் காலங்களில் நேருக்கு நேர் போரிடும் சாத்தியம் மிகவும் குறைவாக இருக்கும். அப்போது கண்ணுக்குத் தெரியாத பயங்கரவாதம் தலையெடுக்கும். அதை எதிர்த்துப் போராடத் தயாராக இருக்கும்படி முப்படைத் தளபதிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆண்டுதோறும் நடைபெறும் முப்படைத் தளபதிகளின் மாநாட்டில் பிரதமராகப் பதவியேற்றதற்குப் பிறகு மோடி முதன்முறையாகக் கலந்துகொண்டார். அப்போது அவர்களிடையே அவர் பேசியதாவது:
"நம் நாட்டின் பொருளாதார இலக்குகளை வெற்றிகொள்ள வேண்டுமென்றால் அதற்கு நாட்டில் அமைதியும் பாதுகாப்பும் நிலவ வேண்டும். எனவே, பாதுகாப்புத் துறையைப் பலப்படுத்த இந்திய அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது. மாறி வரும் உலகத்துக்கு ஏற்ப, இந்தியாவும் தன்னை மாற்றிக்கொண்டு வருகிறது. அதற்கேற்றாற்போல் பாதுகாப்பு, பொருளாதாரம், ராஜதந்திரம் போன்ற துறைகளில் புதிய சிந்தனைகளை ஈர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
வரும் காலங்களில் நேருக்கு நேர் போரிடும் சந்தர்பங்கள் மிகவும் அரிதாகவே இருக்கும். அப்போது கண்ணுக்குப் புலனாகாத விஷயங்கள் நம்மைத் தாக்கும். அவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்.
தரை, கடல், வான் ஆகியவை போன்று அடுத்து வரும் காலங்களில் இணைய வெளி (சைபர்ஸ்பேஸ்) தாக்குதல்கள் அதிகமாக நடைபெறலாம். அந்த வெளியையும் நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
இந்நிலையில், பாதுகாப்புத் துறையை எந்தெந்த வழிகளில் எல்லாம் பலப்படுத்த முடியுமோ, நவீனப்படுத்த முடியுமோ அவற்றைச் செய்துதர இந்த அரசு தயாராகவே உள்ளது". இவ்வாறு அவர் கூறினார்.