Last Updated : 01 Mar, 2014 10:00 AM

 

Published : 01 Mar 2014 10:00 AM
Last Updated : 01 Mar 2014 10:00 AM

ஆக்ரா: எஜமானியைக் கொலை செய்தவரின் பெயரைச் சொல்லி காட்டிக் கொடுத்த கிளி

தன் எஜமானியைக் கொன்றவரை ஒரு கிளி காட்டிக் கொடுத்துள்ளது. தடயமின்றித் தவித்து வந்த போலீஸாருக்கு உரிய நேரத்தில் கொலையாளியை அந்தக் கிளி அடையாளம் காட்டியிருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா பல்கேஷ்வர் பகுதியில் வசிப்பவர் விஜய்சர்மா. உள்ளூர் இந்தி நாளிதழின் ஆசிரியராக உள்ளார். கடந்த 23-ம் தேதி விஜய்சர்மா ஒரு திருமணத்துக்குச் சென்று விட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவி நீலம் சர்மா (45) மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.

இதை மிகவும் திறமையுடன் செய்த கொலையாளி, இது குறித்த எந்தவிதமான தடயங்களையும் விட்டுச் செல்லவில்லை. இதனால், சம்பந்தப்பட்ட சத்தா காவல்நிலையப் போலீஸார் வழக்கை தீர்க்க முடியாமல் திணறி வந்தனர். இந்நிலையில் நீலம் சர்மா வளர்த்து வந்த கிளி கொலையாளியை போலீஸாருக்கு அடையாளம் காட்டியது.

இது குறித்து விஜய் சர்மா ‘தி இந்து’விடம் கூறுகையில், ‘என் சகோதரி மகன் அசுதோஷ் சர்மாவை (30) என் வீட்டில்தான் வளர்ப்பு மகன் போல் பாவித்து வளர்த்து வந்தேன். என் மனைவியின் கொலை வழக்கு விசாரணைக்காக போலீஸார் இங்கு வரும் போது என் வீட்டு செல்லக்கிளி, அசுதோஷ் சர்மாவின் (30) பெயரை ‘ஆஷு! ஆஷு!’ என சத்தமிட்டுக் கூறியது. அதன் பிறகு, அவன் வரும் போதெல்லாம், அந்தக் கிளி, இயற்கைக்கு மாறாக வினோதமான செய்கைகளுடன் சத்தம் போட்டது. இதில் சந்தேகம் ஏற்பட்டு போலீஸாரிடம் கூறினோம்’ என்றார்.

இதன் பிறகு, அசுதோஷை விசாரித்த போலீஸாரிடம் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

இது குறித்து ஆக்ரா மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஷைலாப் மாத்தூர் ‘தி இந்து’விடம் கூறுகையில், “வீட்டில் இருந்த பணம், நகைகளை கொள்ளை அடிக்கும் போது இந்தக் கொலையும் நடந்துள்ளது. அப்போது, நீலம் வளர்த்த ஒரு நாயும் கொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு உடந்தையாக இருந்த ரோனி மெஹில் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மொபைல் எண்ணில் பேசப்பட்ட விவரங் களை எடுத்து கேட்ட பின் இருவரையும் கைது செய்துள்ளோம்’’ எனத் தெரிவித்தார்.

அசுதோஷ் அந்த வீட்டிலேயே இருந்ததால், அவர் உள்ளே வரும்போது நாய் குரைக்கவில்லை. அவர் நகை, பணத்துடன் வெளியேறும் போது குரைத்திருக்கிறது. நாய் காட்டிக் கொடுத்துவிடும் என்பதற்காக அதனைக் கொன்றுவிட்டனர். அப்போது புத்திசாலித்தனமாக அமைதியாக கூண்டுக்குள் இருந்த கிளி, அதன் பிறகு காட்டிக் கொடுத்துவிட்டது.

தன்னைப் பாசம் காட்டி வளர்த்த உரிமையாளர்களுக்கு தன் விசுவாசத்தை உரிய நேரத்தில் காட்டியிருக்கிறது அந்தக் கிளி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x