

புதுச்சேரியில் கடந்த ஒரு மாத காலத்தில் 4ம் முறையாக 2ம் எண் புயல் கூண்டு கடந்த சனிக்கிழமை ஏற்றப்பட்டது. மாதி புயல் சின்னம் காரணமாக 4வது நாளாக செவ்வாய்க்கிழமை வரை 2 ம் எண் புயல் அபாய கூண்டு நீடிக்கிறது. கடல் சீற்றம் புதுச்சேரியில் கடந்த 4 நாட்களாக அதிக அளவில் உள்ளது.
குறிப்பாக முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட சோலைநகர் வடக்கு மற்றும் தெற்கு கடலோர பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர் குடியிருப்புகள் கடல் அரிப்பால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
கடற்கரையோரம் கொட்டப்பட்ட கருங்கல் அனைத்தும் அலையால் இழுத்து செல்லப்பட்டதால், ஊருக்குள் கடல்நீர் அடிக்கடி புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. சிலரின் வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. இப்பகுதிகளில் முதல்வர் ரங்கசாமி திங்கள்கிழமை ஆய்வு செய்தார். சோலைநகர் பகுதியில் கடலரிப்பை தடுக்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக மக்களிடம் முதல்வர் உறுதியளித்தார்.
இதனிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மீனவர் பாதிப்பு தொடர்பாக விரைவில் ஆளுநரை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இது பற்றி புதுச்சேரி நகர செயலர் முருகன் கூறியதாவது:
கடந்த 2007ல் முதல்வராக ரங்கசாமி இருந்தபோது தூண்டில் முள் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். இத்திட்டப்படி சோலைநகர் பகுதியில் கடலில் கருங்கற்கள் கொட்டவும், சுவர் எழுப்பவும் ரூ. 8 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அந்நிதி எங்கே சென்றது என தெரியவில்லை. தற்போது கடல் சீற்றத்தால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இதுதொடர்பாக விரைவில் துணைநிலை ஆளுநரை சந்தித்து மனு தர உள்ளோம் என்று குறிப்பிட்டார்.அதிமுக மாநில செயலர் அன்பழகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு நிவாரண உதவி அளிக்க வேண்டும். புதுச்சேரி மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனாம் பகுதிக்கு மட்டும் நிவாரண உதவி தரப்படுகிறது. இதை கண்டித்து விரைவில் அதிமுக போராட்டத்தில் ஈடுபடும் என்று தெரிவித்துள்ளார்.