

செம்மரம் கடத்த முயன்றதாகக் கூறி, தமிழகத்தை சேர்ந்த 20 தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப் பட்டு 2 ஆண்டுகள் நிறைவடை கிறது. இந்நிலையில் இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வாய்ப்பு இருப்பதாக வழக்கறிஞர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் உள்ள சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி இரவு செம்மரம் கடத்த முயன்றதாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த 20 கூலி தொழிலாளர்களை ஆந்திர அதிரடிப்படை மற்றும் வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர்.
இது போலி என்கவுன்ட்டர் என தமிழக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டின. இது தொடர்பாக ஹைதராபாத் நீதிமன்றத்தில் அடையாளம் தெரியாத 24 போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் இதுகுறித்து தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது. இதன்படி ஆணையத்தின் தலைவர் நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமை யிலான குழு விசாரணை நடத்தி யது. பின்னர் இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென ஆந்திர அரசை வலியுறுத்தியது.
இதைத்தொடர்ந்து ஆந்திர அரசு சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. சுமார் ஓராண்டு வரை விசாரணை நடத்திய இக்குழு, “செம்மர கடத்தல் கும்பல் தாக்கியதால்தான், போலீஸார் என்கவுன்ட்டர் செய்தனர். இது போலி என்கவுன்டர் அல்ல” என தனது அறிக்கையை தாக்கல் செய்தது.
இந்த சம்பவம் நடந்து 2 ஆண்டுகள் முடிந்துள்ள போதிலும், இது தொடர்பான வழக்கு விசாரணை மந்தமாக நடைபெறுகிறது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் சார்பில் நீதிமன்றத்தில் வாதாடி வரும் வழக்கறிஞர் கிராந்தி சைதன்யா ‘தி இந்து’ விடம் கூறியதாவது:
தமிழர்கள் மீது ஆந்திர போலீஸார் என்கவுன்ட்டர் நடத்திய இடத்தில் ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட செம்மரங்களும் துருப் பிடித்த கோடரிகளும் கிடந்தன. இறந்தவர்களின் காலணிகள் கூட சிதறாமல் இருந்தன. பலரது உடல்களில் மர்ம காயங்கள் இருந்தன. இவையெல்லாம் போலி என்கவுன்ட்டர் என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளன.
ஆனால் ஆந்திர அரசின் சிறப்பு புலனாய்வுக் குழு உண்மைக்குப்புறம்பாக அறிக்கை தாக்கல் செய்துள்ளன. இந்த அறிக்கையின் நகல்கூட இதுவரை வழங்கப்படவில்லை. எனவே, இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிடும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.