

நசுக்குவேன் என்று நான் பத்திரிகை யாளர்களை கூறவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூர் தொகுதி எம்.பி.யான ஷிண்டே, ஞாயிற்றுக்கிழமை தனது தொகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த 4 மாதங்களாக எலக்ட்ரானிக் ஊடகங்களில் ஒரு பிரிவினர் என்னைப் பற்றியும் காங்கிரஸ் கட்சியை பற்றியும் செய்திகளை திரித்து வெளியிடுகின்றனர். அவதூறு பிரச்சாரத்தை அவர்கள் நிறுத்தாவிடில் அவர்களை நாங்கள் நசுக்குவோம்” என்றார்.
“என்னிடம் உளவுத்துறை உள்ளது. இதை யார் செய்கி றார்கள்? என்ன நடக்கிறது என்பதெல்லாம் எனக்குத் தெரியும். இதற்குப் பின்னால் சில சக்திகள் உள்ளன” என்றும் ஷிண்டே குறிப்பிட்டார். வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெறும், காங்கிரஸ் தோல்வி அடையும் என்று தேசிய மற்றும் பிராந்திய ஊடகங்களில் கருத்துக்கணிப்புகள் வெளியாகி வந்த நிலையில் ஷிண்டே இவ்வாறு கூறினார். இந்நிலையில் ஷிண்டே, தான் அவ்வாறு கூறவில்லை என்று நேற்று கூறினார்.
இதுகுறித்து அவர் சோலாப்பூரில் கூறுகையில், “நான் எனது பேச்சை பதிவு செய்துள்ளேன். சமூக ஊடகங்கள் பற்றியும் கர்நாடகம் மற்றும் ஹைதராபாத்தில் வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு எதிரான வன்முறை பற்றியுமே குறிப்பிட்டேன். எனது கருத்துகள் பத்திரிகையாளர்களை பற்றி அல்ல” என்றார்.