

தெற்கு காஷ்மீர், அனந்தநாக் நகரில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 போலீஸார் உயிரிழந்தனர்.
அனந்தநாக் நகரின் முக்கிய பேருந்து நிலையத்தில் மாநில போலீஸார் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுட்டிருந்தனர். முற்பகல் 11.20 மணியளவில் போலீஸார் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பஷீர் அகமது, கான்ஸ்டபிள் ரியாஸ் அகமது ஆகிய இருவரும் மருத் துவமனையில் உயிரிழந்தனர்.
தீவிரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து, போலீஸார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். தப்பிச் சென்ற தீவிரவாதிகளை தேடும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ் சாலையில் நேற்று முன்தினம் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிர வாதிகள் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதல் நடந்த அடுத்த 24 மணி நேரத்துக்குள் மற்றொரு தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர்.
எதிர்வரும் இடைத்தேர்தலை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானி அழைப்பு விடுத்துள்ள நிலையில் இத்தாக்குதல் நடந்து வருகிறது.