Published : 06 Feb 2014 07:43 PM
Last Updated : 06 Feb 2014 07:43 PM

பொதுத்துறை வங்கிகள் திங்கள்கிழமை நாடு தழுவிய வேலைநிறுத்தம்

ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால் பிப்ரவரி மாதம் 10 மற்றும் 11 தேதிகளில், நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. அடுத்தச் சுற்றுப் பேச்சுவார்த்தை பிப்ரவரி 13-ஆம் தேதி நடக்கவுள்ளது.

முன்னதாக இந்த வேலை நிறுத்தத்தை தவிர்க்க , கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்து சமாதானம் பேசுமாறு இந்திய வங்கிகள் அமைப்புக்கு தலைமை தொழிலாளர் ஆணையர் பி.கே சன்வாரியா உத்தரவிட்டார். ஆனால் இந்த சந்திப்பில், 10 சதவித உயர்வு என்ற முந்தைய சலுகை உயர்த்தப்படாததால் கூட்டமைப்பு நிர்வாகிகள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர்.

முதலில் ஜனவரி 20-21 தேதிகளில்தான் வேலை நிறுத்தம் நடப்பதாக இருந்தது. அதனால் வங்கிகள் அமைப்பு, ஊதிய உயர்வை 5 சதவீதம் உயர்த்தி 9.5 சதவிதம் உயர்வு வழங்குவதாகவும், மேலும் உயர்த்துவோம் என்றும் உத்தரவாதம் அளித்தது. ஆனால் ஜனவரி மாதம் நடந்த சந்திப்பில் வெறும் 0.5 சதவிதம் மட்டுமே உயர்த்தப்பட்டது. பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு ஏறக்குறைய 30 சதவிதம் ஊதிய உயர்வு கோரியிருந்த வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் இதனால் ஏமாற்றமடைந்தனர். இந்த ஊதிய உயர்வு நவம்பர் 2012-ல் இருந்து நிலுவையில் உள்ளது. தற்போது, இந்தியாவில் 27 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. இதில் 8 லட்சம் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.

அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் அமைப்பின் பொதுச் செயலாளர் வெங்காடசலம் இந்த வேலை நிறுத்தத்தைப் பற்றி கூறியதாவது:

"பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், வேலை நிறுத்தம் அறிவிப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது. இதற்கு அவர்களே காரணம். ஊதிய உயர்வில் தாமதம் ஏற்பட்டுள்ளதைக் கண்டித்து நாடு முழுவதும் ஏற்கனவே ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. வரும் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் சுமார் 1 லட்சம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர்"

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x