

கர்நாடகாவில் நேற்று திடீரென பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அரசுப் பேருந்து அடித்து செல்லப்பட்டது. அந்தப் பேருந்தையும் பயணிகளையும் கிராமத்தினர் காப்பாற்றினர்.
கர்நாடக மாநிலத்தில் கதக், பீதர், ஹாவேரி உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. கதக் மாவட்டத்தில் நேற்று அதிகாலை திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் லக்ஷ்மேஸ்வரில் இருந்து எல்லாப்புரா நோக்கி கர்நாடக அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.
டொட்டூரில் உள்ள தரை மேம்பாலத்தை பேருந்து கடக்கும்போது திடீரென வெள்ளம் அதிகரித்தது. இதனால் ஓட்டுநர் மல்லப்பாவின் கட்டுப்பாட்டில் இருந்து விலகிய பேருந்து வெள்ளத்தில் மெல்ல அடித்து செல்லப்பட்டது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகளும், நடத்துநரும் காப்பாற்றுமாறு கூச்சல் போட்டனர். இதைக்கண்ட கிராம மக்கள் எல்லாப்புரா போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனிடையே, கிராம மக்கள் பேருந்தையும் பயணிகளையும் காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர். பேருந்தின் இரு பக்கத்தையும் வடத்தைக் (கனமான கயிறு) கொண்டு பெரிய ஆலமரத்தில் கட்டினர். உடனடியாக பேருந்தின் அவசரகால கதவைத் திறந்து பயணிகளை வெளியேற்றனர். இதையடுத்து இடுப்பளவு நீரில் பயணிகள் மீட்டனர்.
பின்னர் ஜேசிபி வாகனம் மூலம் பேருந்தை கரைக்கு இழுக்கும் பணியில் ஈடுபட்டனர். வெள்ளம் வேகமாக சீறிப் பாய்ந்ததால் பேருந்தை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனிடையே சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு படையினர், கிராம மக்கள் உதவியுடன் பேருந்தை மீட்டனர். காப்பாற்றப்பட்ட ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பயணிகள் டொட்டூர் கிராம மக்களுக்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்தனர். கதக் மாவட்ட நிர்வாகமும் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது.