

தனித் தெலங்கானா அமைப்பது குறித்து தனது இறுதி முடிவை தெரிவிக்க ஆந்திர அரசுக்கு ஆறு வார காலம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பரிந்துரையின் பேரில் இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனித் தெலங்கானா அமைப்பது தொடர்பாக இறுதி வரைவு அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவர் பார்வைக்காக அனுப்பியிருந்தது.
இந்நிலையில், அந்த அறிக்கையை நேற்றிரவு குடியரசுத் தலைவர் மீண்டும் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளார்.
சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் முன்னர், ஆந்திர சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக குடியரசுத் தலைவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, ஆந்திர சட்டசபை சபாநாயகர் அலுவலகத்துக்கு தனித் தெலங்கானா மசோதா அனுப்பி வைக்கப்படுகிறது.
இது தொடர்பாக சபாநாயகர் என்.மனோகருக்கு ஏற்கெனவே தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ஆந்திர சட்டமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 5-ஆம் தேதி, தெலங்கானா பகுதியில் உள்ள 10 மாவட்டங்களை இணைத்து தனி தெலங்கானா மாநிலம் அமைக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
அடுத்த பத்து ஆண்டுகள் வரை இரு மாநிலங்களுக்கும் ஹைதராபாத் பொது தலைநகரமாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டது.
அனந்தப்பூர், கர்னூல் மாவட்டங்களை தெலங்கானாவுடன் இணைக் கும்திட்டம், கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.