

தென்னிந்தியப் பெண்களின் தோலின் நிறம் குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையைக் கிளப்பிய ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவர் சரத் யாதவ், தனது கருத்தைத் திரும்பப் பெறவும், மன்னிப்புக் கேட்கவும் மறுத்துவிட்டார்.
கடந்த வாரம், மாநிலங்களவையில் காப்பீட்டுத் துறை சீர்திருத்தம் மசோதா மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய சரத் யாதவ், "காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை 26 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக மத்திய அரசு உயர்த்துகிறது. இங்கு சிலர் தோலின் நிறத்தால் மயங்கியவர்களாக உள்ளனர். நம் நாட்டில் கருப்பு நிறமுடைய ஆண்கள் பலர் உள்ளனர். உங்கள் கடவுள் உங்கள் எம்.பி. ரவிசங்கர் பிரசாத் போல் கருப்பாகவே உள்ளார்.
ஆனால், மணமகள் தேடும் இணையதளத்தில் வெள்ளை நிறப் பெண்களைத்தான் அதிகம் விரும்புகின்றனர். தென்னிந்தியப் பெண்கள் கருப்பானவர்களே. ஆனால், அழகான உடல் அமைப்பைக் கொண்டவர்கள். அவர்களுக்கு நடனமாடவும் தெரியும். ஆனால், சிலர் வெள்ளைத் தோலின் நிறத்தால் மயங்கியவர்களாக உள்ளனர்.
நிர்பயா ஆவணப்படம் எடுத்த, லெஸ்லி உட்வின்கூட வெள்ளைத் தோல் நிறத்தைக் கொண்டவராக இருந்ததால்தான் அவருக்கு சிறையில் ஆவணப்படம் எடுக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு அழகான பெண்களுக்குத்தான் அனைத்து வாய்ப்புகளும் கொடுக்கப்படுகின்றன" என பேசினார். இதற்கு திமுக எம்.பி. கனிமொழி உட்பட பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று மாநிலங்களவையில் இப்பிரச்சினையை குறிப்பிட்டு பேசிய ரவிசங்கர் பிரசாத், "கடந்த வாரம் தென்னிந்தியப் பெண்கள் பற்றியும், என்னைப் பற்றியும் சரத் யாதவ் பேசினார்.
ஆனால், அன்றைய விவாதப் பொருளில் இருந்து திசை திரும்ப விரும்பாத காரணத்தாலேயே நான் அமைதி காத்தேன். சரத் யாதவ் கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவர் அந்த கருத்தை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். அவைத் தலைவர் இவ்விவகாரத்தில் தலையிட்டு சரத் யாதவ் அவரது கருத்தை திரும்பப்பெற வலியுறுத்த வேண்டும்" என்றார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய சரத் யாதவ், "எனது கருத்துகள் திரித்துக் கூறப்பட்டுள்ளன. இப்போதும் நான் கூறிய கருத்தில் இருந்து விலக நினைக்கவில்லை. இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவது கருப்பு நிற தோல் கொண்ட பெண்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அவர்களில் பலர் நிற பேதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து நான் யாருடன் வேண்டுமானாலும் விவாதிக்க தயாராக இருக்கிறேன்" என்றார்.
அப்போது பேசிய மனிதவள அமைச்சர் ஸ்மிரிதி இராணி, "மூத்த அரசியல்வாதியான நீங்கள் பெண்ணின் நிறம் குறித்து பேசுவதை தவிர்க்க வேண்டும். உங்கள் கருத்தால் நாடு முழுவதும் தவறான தோற்றம் பரவும்" என்றார்.
ஸ்மிரிதியின் குற்றச்சாட்டை மறுத்த சரத் யாதவ், "உங்கள் குற்றச்சாட்டை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். பெண்கள் நிற பேதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதற்கு நிறைய சான்றுகளை என்னால் எடுத்துரைக்க முடியும். இது தொடர்பான விவாதத்துக்கு நான் தயார்" என்றார்.
அவை துணைத் தலைவர் குரியன் கூறும்போது, "நிறம் தொடர்பான எந்த விவாதத்துக்கு அவையில் அனுமதி இல்லை" எனக் கூறினார்.