

தமிழகத்தைச் சேர்ந்த ஜேஎன்யு மாணவர் டெல்லியில் மரணமடைந்தார், இவரது மரணம் குறித்த மர்மம் நீடித்து வரும் நிலையில், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துப் பேசினார் மத்திய தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி மார்ச் 9-ம் தேதி துவங்கி, நடைபெற்று வருகிறது. இன்று (புதன்கிழமை) மாநிலங்களவை கூடிய நிலையில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சீத்தாராம் யெச்சூரி, ''ஏன் தலித் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்? இந்த அரசாங்கத்தின் கீழ் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன'' என்றார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மாணவர்களுக்கான சிறந்த இடமாகப் பல்கலைக்கழகங்களை மாற்றுவதில் மத்திய அரசுக்குப் பொறுப்பு இருக்கிறது என்று கூறினார்.
இதுகுறித்து மாநிலங்களவையில் பேசிய நிர்மலா சீதாராமன், ''இது மிகவும் உணர்வுபூர்வமான விஷயம். நான் முத்துக்கிருஷ்ணனின் தந்தை மற்றும் அவரது பொறுப்பாளரைச் சந்தித்தேன். மாணவர் தலைவர்களிடமும் பேசினேன்.
முதல் தகவல் அறிக்கை 12-ம் தேதி மதியத்துக்குள் பதிவு செய்யப்பட்டு, நகல்கள் அனுப்பப்பட வேண்டும் என்று காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
தன்னார்வலர்களும், மாணவர்களும் எஸ்சி/ எஸ்டி சட்டம் ஏன் செயல்படுத்தப்படக்கூடாது என்று கேட்டுள்ளனர். நாங்கள் காவல்துறையிடம் தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட தகவல்களை ஏன் அறிக்கையில் சேர்க்கவில்லை என்று கேட்டோம். சந்தேகத்துக்குரிய வகையில் இருந்தால் ஒழிய, எதையும் சேர்க்க முடியாது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
யாருடைய பெயரையும் குறிப்பிடாமல், அனைத்துப் பிரிவுகளையும் சேர்க்கச் சொல்லி இருக்கிறோம். பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நலனை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட பேராசிரியர் தோரத் கமிட்டீ பரிந்துரைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை.
நடந்த சம்பவங்கள் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு அறிக்கை அனுப்பியுள்ளேன். மாணவர்களுக்கான சிறந்த இடமாகப் பல்கலைக்கழகங்களை மாற்றுவதில் எங்களுக்கு பொறுப்பு இருக்கிறது'' என்று பேசினார்.
இதுபற்றிப் பேசிய மாநிலங்களவையின் துணைத் தலைவர் குரியன், ''பல்கலைக்கழகங்களில் தலித் மாணவர்களுக்கு எதிராகப் பாகுபாடு இருக்கிறதா?, அரசு இந்த வகையிலும் கவனித்து பார்க்க வேண்டும்'' என்றார்.