Last Updated : 14 Aug, 2016 11:56 AM

 

Published : 14 Aug 2016 11:56 AM
Last Updated : 14 Aug 2016 11:56 AM

காஷ்மீரில் ஊரடங்கு நீடிப்பு: பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு

காஷ்மீரில் கடந்த மாதம் 8-ம் தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் கமாண்டர் புர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து வன்முறை வெடித்தது. வன்முறையில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு எதிராக பிரிவினைவாதிகள் போராட்டத்தை தூண்டி வருவதால் அங்கு 1 மாதத்துக்கும் மேலாக பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் பொது வாக்கெடுப்பு கோரி ஸ்ரீநகரின் லால் சவுக் பகுதி நோக்கி நேற்றும் இன்றும் பேரணி செல்லும்படி பொதுமக்களுக்கு சையது அலி ஷா கிலானி, மிர்வைஸ் உமர் ஃபரூக், முகம்மது யாசின் மாலிக் ஆகிய பிரிவினைவாத தலைவர்கள் அழைப்பு விடுத்தனர்.

இதையடுத்து இந்தப் போராட்டத்தை முறியடிக்கும் வகையில் ஸ்ரீநகர் மாவட்டம் முழுவதும் நேற்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது தவிர தெற்கு காஷ்மீரின் அனந்தநாக் நகரிலும் நேற்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதனிடையே கடந்த வாரம் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த சுஹைல் அகமது வானி என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். புல்வாமா மாவட்டம், லெத்போரா என்ற இடத்தில் ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் நடந்த வன்முறை போராட்டத்தின்போது இவர் காயம் அடைந்தார்.

இவரது மரணத்தால் காஷ்மீரின் கடந்த மாதம் முதல் தொடரும் வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x