Last Updated : 01 Aug, 2016 04:59 PM

 

Published : 01 Aug 2016 04:59 PM
Last Updated : 01 Aug 2016 04:59 PM

அடுத்தடுத்து பாயும் கைது நடவடிக்கை: உஷார் நிலையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்

ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கைது நடவடிக்கை தொடர்கதையாகி வரும் நிலையில் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளனர்.

தங்கள் அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி வருவதாகவும், பெண்களை சந்திப்பதைக் கூட கவனமாக தவிர்த்து வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைந்து 18 மாதங்கள் ஆன நிலையில் இதுவரை 12 எம்.எல்.ஏ.க்கள் பல்வேறு புகார்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேஜ்ரிவால் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில், பாஜகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பல மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கவனமாக இருக்கும்படி கோரியிருந்தார்.

இந்நிலையில், தங்கள் அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி வருவதாகவும், பெண்களை சந்திப்பதைக் கூட கவனமாக தவிர்த்து வருவதாகவும் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலர் கூறியுள்ளனர்.

அடுத்தது யார்?

இதுவரை கைது செய்யப்பட்ட 12 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களில் சனிக்கிழமை கைதான நரேலா தொகுதி எம்.எல்.ஏ. ஷரத் சவுகானைத் தவிர எஞ்சிய 11 பேரும் ஜாமீனில் வெளியில் உள்ளனர்.

அடுத்தது யாராக இருக்கும் என கட்சி வட்டாரத்துக்குள் சலசலப்பு கிளம்பியுள்ளது.

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மீது கைது நடவடிக்கை குறித்து கட்சியின் மூத்த தலைவர் அசுதோஷ் கூறும்போது, "ஒவ்வொரு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கும்போதும் வலுவான ஆதாரம் இல்லாமல் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக நீதிபதிகள் டெல்லி போலீஸாரை கண்டித்துள்ளனர்" என்றார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை:

சிறைக்குச் செல்ல தயங்கவில்லை எனக் கூறும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் அதே வேளையில் போலியான குற்றச்சாட்டுகளில் கைது செய்வதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்சி அலுவலகங்களில் சிசிடிவி காமரா பொருத்தி வருவதாகக் கூறுகின்றனர்.

மேலும், கட்சி அலுவலகத்தில் தொண்டர்களுடன் பேசினாலும் சரி, வேறு தனிநபர்களிடம் பேசினாலும் சரி அனைத்தையும் பதிவு செய்யுமாறு கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

அது தவிர பெண்களுடனான சந்திப்பை தவிர்க்குமாறும் மீறியும் அவ்வாறான சந்திப்புக்கு அவசியம் ஏற்பட்டால் அனைத்து உரையாடலையும் பதிவு செய்யுமாறு எம்.எல்.ஏ.க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x