

இந்தியாவில் அல் கய்தா பிரிவை சேர்ந்த 17 பேர் டெல்லி போலீஸார் சனிக்கிழமையன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்தியாவில் அல் கய்தா பிரிவை தொடங்க முயற்சி நடப்பதாக மத்திய அரசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிர கண்காணிப்பில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர். அப்போது, கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் முதல் ஜனவரி 2016 வரையில் நாட்டின் பல பகுதிகளில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் 12 பேர் தலைமறைவாகி விட்டனர். முகமது ஆசிப், ஜாபர் மசூத் அப்துல் ரகுமான், சயத் அன்சார் ஷா, அப்துல் சமி ஆகிய 5 பேரை டெல்லி அழைத்து வந்து பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தியாவில் அல் கய்தா தீவிரவாத பிரிவை தொடங்க முயற்சித்தது, தீவிரவாதத்துக்கு இளைஞர்களை சேர்த்தது, இந்தியாவுக்கு எதிராக சதி திட்டம் தீட்டியது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், பாகிஸ்தான், இரான், துருக்கி ஆகிய நாடுகளில் உள்ள தீவிரவாத அமைப்புகளுடன் இந்த 5 பேரும் தொடர்பில் இருந்துள்ளனர். இந்தியாவுக்கு எதிராக ஜிகாத் போரில் ஈடுபட அந்த அமைப்புகளில் இருந்து பணமும் பெற்றுள்ளனர். இதையடுத்து இவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு டெல்லி கூடுதல் அமர்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், தலைமறைவான 12 பேர் உட்பட 17 பேர் மீது டெல்லி போலீஸார் நேற்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரீதேஷ் சிங் முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.