

ஆந்திர மாநிலத்தைப் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பந்த் நடத்த தெலுங்கு தேசம் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இதையடுத்து சீமாந்திரா பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஆந்திர சட்டமன்றத்தில் தெலங்கானா மசோதாமீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், உறுப்பினர்கள் விவாதிக்க கால அவகாசத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, வியாழக்கிழமை தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பந்த் நடத்த அழைப்பு விடுவிக்கப்பட்டது.
பந்த் காரணமாக, சீமாந்திரா பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்கவில்லை. ரயில் போக்கு வரத்து மட்டுமே இருந்ததால், அதில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது. பல மாவட்டங்களில் ஆட்டோக்கள் ஓடவில்லை.
போராட்டம் காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக் கும் விடுமுறை அளிக்கப்பட்டது. வங்கிகள் இயங்கவில்லை. வணிக வளாகங்கள், ஓட்டல்கள், கடைகள் அடைக்கப்பட்டன. பெட்ரோல் பங்க்குகளும் மூடப்பட்டதால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்கு உள்ளானார்கள். சீமாந்திராவின் 13 மாவட்டங்களிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
காலை 6 மணி முதல் சாலை மறியல், மனிதச் சங்கிலி, கண்டன ஊர்வலம், தர்ணா உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால், நகர்ப்புறங்களுக்கு வெளியே சாலைகளில் நீண்ட தூரம்வரை பல கிலோ மீட்டர் களுக்கு லாரிகள் மற்றும் இதர வாகனங்கள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன.
பக்தர்களின் வசதிக்காக, திருப்பதியில் இருந்து திரு மலைக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. திருப்பதிக்கு தமிழகம், கர்நாட கம் உள்ளிட்ட வெளிமாநில பஸ்கள் வராததால், பக்தர்கள் தங்களது ஊர்களுக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.
தெலங்கானா மசோதாவை நிராகரித்து முதல்வர் கிரண் குமார் ரெட்டி கொண்டு வந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டமன்றத்தில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. சட்டமன்றம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.