உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று காவிரியில் தண்ணீர் திறக்க முதல்வர் சித்தராமையா முடிவு: கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம்

உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று காவிரியில் தண்ணீர் திறக்க முதல்வர் சித்தராமையா முடிவு: கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம்
Updated on
2 min read

மண்டியா, மைசூருவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; மாநிலம் முழுவதும் 9-ம் தேதி முழு அடைப்பு

உச்ச நீதிமன்ற உத்தரவை மதித்து, காவிரியில் தண்ணீர் திறக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்தார். இதற்கிடையில், கர்நாடக விவசாயிகளும், கன்னட அமைப்பினரும் மண்டியா, மைசூரு, ராம்நகர் உள்ளிட்ட இடங்களில் தீவிர‌ போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி ஆகஸ்ட் இறுதிக்குள் காவிரியில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 50.052 டிஎம்சி நீரை கர்நாடக அரசு வழங்கவில்லை. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் “தமிழகத்துக்கு காவிரி யில் வினாடிக்கு 15,000 கன அடி நீரை செப்டம்பர் 5-ம் தேதி முதல் அடுத்த 10 தினங்களுக்கு கர்நாடக அரசு திறக்க வேண்டும்'' என நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து கர்நாடக அரசு காவிரியில் வினாடிக்கு 15,000 கன அடி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசைக் கண்டித்தும் கர்நாடக மாநில விவசாயிகள் சங்கம் மற்றும் கன்னட அமைப்புகளின் கூட்டமைப் பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக கரும்பு விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினரின் சார் பாக நேற்று மண்டியாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப் பட்டது. மண்டியா மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 9-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் கடைகள், வணிக வளாகங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அடைக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மண்டியாவில் உள்ள விஸ்வேஸ் வரய்யா சிலையில் தொடங்கி பேரணியாக சென்ற விவசாயிகள் பெங்களூரு - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டம் வெடித்தது

மண்டியாவை சேர்ந்த கன்னட ரக் ஷன வேதிகே அமைப்பினர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை தீயிட்டு கொளுத் தினர். கர்நாடக முதல்வர் சித்தரா மையா, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் அமைச்சர் அம்பரீஷ் ஆகியோரின் உருவப்படங் களையும் எரித்தனர். அப்போது உச்ச நீதிமன்றத்துக்கு எதிராகவும், தமிழக முதல்வர் ஜெயலலிதா வுக்கு எதிராகவும் கோஷம் எழுப் பினர். விவசாயிகள் கிருஷ்ணராஜ சாகர் அணையை நோக்கி பேரணியாகச் சென்றதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

மைசூருவில் காவிரியில் இறங்க முயன்ற போரட்டாக்காரர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே இரு விவசாயிகள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது. சாம்ராஜ்நகர், ராம்நகர், பெங்களூரு ஆகிய இடங்களிலும் பெரும் போராட்டம் நடைபெற்றது.

போக்குவரத்து நிறுத்தம்

போராட்டத்தை தொடர்ந்து கர்நாடகாவில் இருந்து தமிழகத் துக்கு இயக்கப்பட்ட 700 அரசு மற்றும் தனியார் பேருந்துகள் உடனடியாக நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் இருந்து கர்நாட காவுக்கு இயக்கப்பட்ட பேருந்து களும் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டன. இதனால் ஆயிரக் கணக்கான பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். தமிழக பதிவெண் கொண்ட லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களும் முன்னெச் சரிக்கையுடன் எல்லையிலேயே நிறுத்தப்பட்டன.

பெங்களூரு, மைசூரு, மண்டியா உள்ளிட்ட இடங்களில் தமிழ்த் திரைப்படங்களைத் திரையிட கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே உடனடியாக தமிழ்த்திரைப்படங்களின் காட்சி ரத்து செய்யப்பட்டன.

கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வரும் 9-ம் தேதி கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 700-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

அமைதி காக்க கோரிக்கை

இதனிடையே கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று அவசர அமைச்சரவை கூட்டம் மற்றும் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டினார். இதில் நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா, மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, முன்னாள் முதல்வர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், குமாரசாமி உட்பட அனைத்துக்கட்சி எம்.பி., எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

இதையடுத்து செய்தியாளர் களிடம் பேசிய சித்தராமையா, ‘‘கர்நாடக அரசு விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது. மக்கள் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது. அனைவரும் அமைதி காக்க வேண் டும். அதே நேரம், உச்ச நீதிமன்ற உத்தரவை மதித்து, காவிரியில் தண்ணீர் திறக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது’’என்றார்.

அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை

காவிரி நதி நீர் பிரச்சினை தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.

காவிரி மேற்பார்வைக் குழுவை நாடுவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடந்தது. முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், தலை மைச் செயலர் பி.ராமமோகன ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் பொதுப்பணித்துறை செயலர், அரசு தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காவிரி பிரச்சினையில் அடுத்தகட்ட நடவடிக் கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகளை முதல்வர் வழங்கியதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in