ஹரியாணாவில் முதல்முறையாக பாஜக ஆட்சி: முதல்வராக கத்தார் பதவியேற்பு

ஹரியாணாவில் முதல்முறையாக பாஜக ஆட்சி: முதல்வராக கத்தார் பதவியேற்பு
Updated on
1 min read

ஹரியாணா மாநில முதல்வராக மனோகர் லால் கத்தார் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

மாநில சட்டசபைத் தேர்தலில் 47 இடங்களைக் கைப்பற்றி பாஜக பெரும்பான்மை பலம் பெற்றதைத் தொடர்ந்து, சட்டசபை பாஜக குழு தலைவராக மனோகர் லால் கத்தார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து முதல்வராக அவர் நேற்று பதவியேற்றார்.

60 வயதாகும் மனோகர் லால், தொடக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலும், அதைத் தொடர்ந்து பாஜகவிலும் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் கர்னால் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். சட்டசபைத் தேர்தலில் முதல் முறையாக வெற்றி பெற்ற நிலையில், அவர் முதல்வராகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மனோகர் லால் கத்தார், பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கும் நெருங்கிய நண்பராவார்.

9 அமைச்சர்கள்

பஞ்ச்குலாவில் நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மனோகர் லால் கத்தாருக்கு ஆளுநர் கப்டான் சிங் சோலங்கி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மனோகர் லாலுடன் மேலும் 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

கவிதா ஜெயின், ராம் பிலாஸ் சர்மா, அபிமன்யு, ஓம் பிரகாஷ் தாங்கர், அனில் விஜ், நர்பிர் பிங் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாகவும், விக்ரம் சிங் தேகேடர், கிருஷண் குமார் பேடி, கரன் தேவ் கம்போஜ் ஆகியோர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றுக் கொண்டனர்.

பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், ராம் விலாஸ் பாஸ்வான், மேனகா காந்தி, அனந்த் குமார், பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மாநில முதல்வர்கள் சிவராஜ் சிங் சவுகான் (மத்தியப் பிரதேசம்), வசுந்தரா ராஜே (ராஜஸ்தான்), ஆனந்திபென் படேல் (குஜராத்), பிரகாஷ் சிங் பாதல் (பஞ்சாப்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பஞ்சாபி இனத்தவர்

ஹரியாணாவில் கடந்த 18 ஆண்டுகளாக ஜாட் இனத்தைச் சேர்ந்தவர்களே முதல்வர் பதவியில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், ஜாட் இனத்தைச் சேராத ஒருவர் தற்போது முதல்வராகியுள்ளார். மனோகர் லால், பஞ்சாபி இனத்தைச் சேர்ந்தவர்.

ரோத்தக் மாவட்டத்தில் உள்ள நிந்தனா கிராமத்தில் 1954-ம் ஆண்டு பிறந்த மனோகர் லால் கத்தார், திருமணம் செய்து கொள்ளாமல் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டார். பின்னர், 1994-ம் ஆண்டு பாஜகவில் இணைந்து கட்சியின் ஹரியாணா மாநில பொதுச் செயலாளராக பதவி வகித்தார். தற்போது ஹரியாணா மாநில தேர்தல் பிரச்சாரக் குழு தலைவராக செயல்பட்டு வெற்றி தேடித்தந்துள்ளார்.

ஹரியாணாவில் முதல்முறை யாக பாஜக தலைமையிலான ஆட்சி ஏற்பட்டுள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, முதல்வராக பதவியேற்ற மனோகர் லால் கத்தாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in