

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு இன்று கூடுகிறது. மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 3-வது வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க் கப்படும் நிலையில் இதற்கான தேதிகளை இக்குழு முடிவு செய்யவுள்ளது.
அசாம் சட்டப்பேரவை தேர்தல் வெற்றி, கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் செல்வாக்கு அதிகரிப்பு ஆகியவற்றால் பாஜகவினர் உற்சாகமும் புத்துணர்வும் அடைந் துள்ள நிலையில் இக்கூட்டத் தொடர் தொடங்குகிறது. மேலும் மோடி தலைமையிலான அரசு 2 ஆண்டுகள் பூர்த்தி செய்துள்ள நிலையில், தங்கள் தலைமையின் கீழ் நாடு மாற்றம் அடைந்து வருவதாக பாஜகவினர் கூறிவரும் வேளையில் இக்கூட்டத் தொடர் தொடங்க உள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 13 வரை நடைபெறலாம் என கருதப்படு கிறது. என்றாலும் இது தொடர்பாக மத்திய அமைச்சரவை குழு இன்று இறுதி முடிவு எடுக்கிறது.
மாநிலங்களவையில் 45 மசோதாக்களும் மக்களவையில் 5 மசோதாக்களும் நிலுவையில் உள்ளன.
பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைக்கு முக்கியமானதாக கருதப்படும் ஜிஎஸ்டி மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மக்களவையில் நிறை வேறியது. இந்த மசோதா உட்பட பல்வேறு மசோதாக்கள் மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளன. ஜிஎஸ்டி மசோதா விவகாரத்தில் பல்வேறு மாநில கட்சிகள் காங்கிரஸ் கட்சியை கைவிட்டு மத்திய அரசை ஆதரிக்க முன்வந்துள்ள நிலையில், வரும் கூட்டத் தொடரில் இதை நிறைவேற்றி விடலாம் என மத்திய அரசு நம்பிக்கை கொண்டுள்ளது.
மற்றொரு முக்கிய மசோதா வாக கருதப்படும் விசிலூதிகள் பாதுகாப்பு மசோதா கடந்த ஆண்டு டிசம்பரில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதம் நிறைவு பெறாமல் உள்ளது. கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
மக்களவையில் நுகர்வோர் பாதுகாப்பு மசோதா, பினாமி பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. இவற்றை வரும் கூட்டத் தொடரில் மத்திய அரசு நிறைவேற்ற முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர மருத்துவம் மற்றும் தொழில் படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்டம், எதிரி சொத்துகள் சட்டத் திருத்தத்துக்கான அவசர சட்டம் ஆகியவற்றுக்கு நாடாளுமன்றத் தின் ஒப்புதலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.